சற்றுமுன்

ஐந்துகோவிலானென்ற இந்த அர்த்தமுள்ள மனிதன்

ஏதோ எட்டாத கனியல்ல அது. சரியான நேரம்... சரியான இடம்... சரியான அணுகுமுறையிருந்தால் யார் வேண்டுமானாலும் அக்கனியைப் பறித்துவிடலாம். அப்படி சிந்தனை, செயல், பேச்சு, மூச்சு... எல்லாவற்றிலும் தங்களது கனவுகளைத் தாங்கி வெற்றிக்கொடி கட்டியவர்களின் தேடுதல் பயணங்கள் பற்றிய பயணக்கட்டுரைதான் இது.

     பாறைகளுக்குள் வேர்கள் விட்ட மரங்களை விடவா முன்னுதாரணங்கள் தேவை வாழ்க்கைக்கு.

     இவர்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல.  நம்மோடு வாழ்ந்தவர்கள். வாழ்கின்றவர்கள். நாம்தான் இவர்கள். இவர்களைப் பற்றி தன்னிலை, முன்னிலை தாண்டி படர்க்கையில் எழுத வந்தாலும் அங்கும் ஒருவன் நம்மைப் போலவே நாயகனாக உலா வருவான். காதல், துரோகம், பசி, இழப்பு என்ற பொதுவான பகிர்தலோடு நம் நெஞ்சில் ஏறி நின்று பாரம் தருவான். இப்படித்தானே அன்று நீயும் ஒருநாள் என்று கழிவிரக்கத்தில் நம்மை நாமே குசலம் விசாரிக்கச் செய்வான்.

     அப்போது நமது பேனா எழுத மறுக்கும்... காகிதத்தில் கண்ணீர் துளிகளே மசிகளாகக் கசியும்...

     நம்மைப் போலவே கனவும், வெறுப்புமாக வாழ்க்கை புரியாமல் முழிகள் பிதுங்க முறைத்துக் கொண்டு நின்றவர்கள்தான் இவர்கள்.
     ஆனால் இன்று வெற்றிக்கொடி கட்டிய வி.ஐ.பி - க்கள் இவர்கள்.   
     எப்படி இது சாத்தியமானது...
     எப்படி இந்த கோபுரத்தில் இவர்கள் ஏறி அமர்ந்தார்கள்....
     இதை பற்றியதொரு பயணம்தான் இது...
     இதுபற்றி, இந்த வி.ஐ.பிக்களிடமே கேட்கலாம்.வாருங்கள்...
     ஐந்துகோவிலான் இவரது பெயர்.

     பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே புரிந்துகொள்ளலாம் இவர் எந்த மண்ணுக்கு சொந்தக்காரரென்று.

     ஆம். மதுரை, உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள கருமாத்தூரிலிருந்து புறப்பட்டு வந்தது இந்த கரிசல்குயில்.
     உங்கள் அழகான குடும்ப பின்னணி பற்றி சொல்லுங்களேன்...
     - இப்படித்தான் ஆரம்பமானது எங்களது முதல் வி.ஐ.பி யின் நேர்கானல்...
     அப்பா கோவிந்தராஜுத்தேவர், அம்மா தங்கம்மாள், இரண்டு தம்பிகள். நான் திருமணமானவன். மனைவி, மகனோடு தற்சமயம் சென்னை கே.கே நகரில் வசித்து வருகிறேன் என்றார்.
      சொந்தஊர் கருமாத்தூரிலிருந்து சென்னைக்கு வந்ததன் நோக்கமென்ன?
     கலை, இலக்கியத்துறையிலிருந்த அளப்பரிய ஆர்வம்... சினிமாவில் தடம்பதிக்கும் ஆவலோடு இயக்குனர் இமயத்தின் அழைப்பின் பேரில் சென்னை வந்தேன்.

     இத்துறையில் எப்படி ஈடுபாடு வந்தது?

     - இப்படித்தான் வழக்கமான கேள்விகளில் எங்கள் நேர்காணல் ஆரம்பமானது. ஆனால் அவர் தந்த பதில்கள் கவித்துவமாக வெளி வந்தது.
     ஒரு  நல்ல கவிதை புத்தகமே தனது பக்கங்களை ஒவ்வொன்றாக எங்களுக்கு வாசித்து காட்டியது போலிருந்தது.

     மண்ணோடும், மழையோடும், தாலாட்டி வளர்த்த தென்றலோடும் கூடி விளையாடிய சிறுவயது நாட்களில் இவர் கண்ட தெருக்கூத்துகளும், தாலாட்டும் இன்னும் பிற கிராமிய இலக்கியங்களுமே இவரை கலை, இலக்கிய உலகுக்குள் கொண்டுவந்ததாக சொல்லுகிறார், இவர்.

     ஆம்!. அன்னையின் கருவறைக்குள் நாம் கேட்ட லப் டப்...

ஓசையைத்தானே நாம் இன்றும் மிக நெருக்கடியான நேரங்களில் குறுக்கும்,  நெடுக்குமாக நடந்தும், தன்னையுமறியாமல் கைகளாலும், கால்களாலும் அதே போன்ற ஒத்த ஓசையை எழுப்பியும், கேட்டும் ஆறுதலடைகிறோம்.
     அதைப்போலத்தான் தாயின் அரவணைப்போடு இச்சமூகம் அக்கறையோடு சொல்லிக்கொடுத்த அத்தனை விஷயங்களும் இன்றைக்கும் நம்மை வழி நடத்துகிறது என்கிறார் இவர்.

     அப்படி தான் படித்த விஷயங்களின் தாக்கங்களால் முதுகலை  நாடகவியலும் படித்து, பின் மதுரையில் அவரது நாடகம் பார்த்து பாராட்டிய இயக்குனர் இமயம் பாரதிராஜா என்ற அந்த மாபெரும் ஞானத்தகப்பனிடம் அவரது அழைப்பின் பேரில் சென்னை வந்து, அவரிடமே உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்று இன்று பல வாகைகளை தான் சூடியுள்ளதாக சொன்னார் இவர்.

      இயக்குனர் இமயத்திடம் உதவி இயக்குனராக இவர் பணியாற்றிய படங்கள்: கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், தாஜ்மகால்.

      இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் இணை இயக்குனராக இவர் பணியாற்றிய படம் : சாமுராய்.

      இயக்குனர் சீமானிடம் இணை இயக்குனராக இவர் பணியாற்றிய படம் : இனியவளே, வீரநடை, தம்பி

      இயக்குனர் தங்கர்பச்சானிடம் இணை இயக்குனராக இவர் பணியாற்றிய படம் : பள்ளிக்கூடம்

     இது தவிர வெண்ணிலா வீடு என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு, அத்திரைப்படத்துக்கு வசனமும் இவரே எழுதியுள்ளார்.
     இத்துடன் இயக்குனர் சங்கத்தேர்தலில் வென்று இரு முறை செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

     தற்போதும் புதிய அலைகள் என்ற அணியிலிருந்து இயக்குனர் சங்க செற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிக் கொண்டுள்ளார்.

     தான் பெற்ற வெற்றிகள் எதுவும் தானாக தேர்வு செய்து நடைமுறைப்படுத்தி கண்ட வெற்றிகளென்று ஒரு நாளும் இவர் சொல்லி கொள்வதில்லையாம். இங்கு நான் கண்ட வெற்றிகள் அனைத்துமே இச்சமூகம் எனக்காக நிர்ணயித்தது. இவர்கள்தான் இவைகளை எனக்கு சொல்லிக்கொடுத்து அதில் வெற்றியும் பெற செய்தார்களென்றே சொல்கிறார்.

     மதுரை அருளானந்தர் கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்த ஐந்துகோவிலானின் வகுப்பு ஆசிரியர் ”உலகத்தில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொன்றுக்கும் அது ஏன் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்கானதொரு அரசியல் அதன்பின் ஒளிந்திருக்குமென்று...” எதார்த்தமாகச் சொன்ன வார்த்தை அவரை சமகாலத்தையும் கடந்து சிந்திக்க தூண்டியதாக சொல்கிறார்.

     உண்மைதான். அடுத்த வீட்டுக்காரன் மகிழ்வுந்தில் செல்லும்போதுதானே நமது குழந்தைகளுக்கும் அது ஏன் கொடுக்கப்படவில்லையென நம்முடைய உறக்கம் தொலைகிறது. எதிர்வீட்டுக்காரி பட்டுப்புடவை கட்டும்போதுதானே நம் மனைவிக்கும் காஞ்சியென்ற ஊரிருப்பதே ஞாபகத்திற்கு வருகிறது.

     அப்படித்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்களும் கூட நம்மை  நமது முன்னேற்றப்பாதையில் ஓடத்தூண்டுகிறது என்கிறார் ஐந்துகோவிலான்.

     மேலும்  நாமே பதில் பேச முடியாத ஒரு வாதத்தை நம்முன் வைத்தார் ஐந்துகோவிலான். கேட்டதும்  நாமே சற்று வெட்கத்தில் தலை குனியத்தான் செய்தோம்.

     ”நம்மை செம்மைப்படுத்துவது மட்டுமல்லாமல்,  நம்மை உருவாக்குவதும் நம்மை சார்ந்த நமது சொந்தங்கள் தானே...

     அடுத்த தெரு அலெக்சாண்டர் மாமா சொல்லிக்கொடுத்த ஆங்கிலப் பாடம்... பக்கத்து வீட்டு சங்கரியக்கா சொல்லிக்கொடுத்த கணக்குப்பாடம்... எதிர்வீட்டு ஈசாக் அண்ணன் சொல்லிக்கொடுத்த அறிவியல் பாடமென்று நமது ஆசிரியர்களின் பட்டியல்கள் இன்னும்  நீண்டு கொண்டே போகக்கூடியது. ஆனால்  நம்மை வழி நடத்திய இந்த சொந்தங்களுக்காக நாம் பதிலுக்கு என்ன செய்தோமென்று என்றாவது யோசிக்க  நினைத்தோமா...” என்ற அவரது இந்த கேள்விக்கு என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

     ஆனால் அரைநிஜார் போட்டுக்கொண்டு, சிறகில்லாமல் பறந்து திரிந்த பள்ளி பருவத்திலேயே ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்து தன் பள்ளித்தோழர்களையெல்லாம் ஒரு பேருந்தில் ஒன்றாக திரட்டிக்கொண்டு சென்று போராட்டம் செய்து கைது செய்யப்பட்டிருக்கிறாராம் இவர்.
     சிறுவயதிலேயே சமூக சிந்தனை...

     மண்சார்ந்த இலக்கியங்களில் உள்ள ஈடுபாடு...

     இவைகளே த.மு.எ.ச (தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) -விலும், பின் புரட்சிகர  நோக்கங்களும், தமிழ் தேசிய சிந்தனைகளும் கொண்ட இயக்கங்களில் தன்னை கொண்டு போய் சேர்த்துக்கொண்டதாக சொல்கிறார்.

     ஒரு மனிதன் தான் கொண்ட லட்சியங்களில் விடாப்பிடியான ஈடுபாடு... தொடர்ந்த அர்ப்பணிப்பு... அயராத முனைப்பு.... இவைகளை செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்கிறார் இவர்.

     கிராமிய இலக்கியங்களில் உள்ள ஈடுபாட்டில் ஒரு சாமானிய கலைஞனாக நமக்கெல்லாம் திரைப்படங்கள் வாயிலாக அறிமுகமான நம் தோழர் ஐந்துகோவிலானை அவர் கொண்ட கொள்கைப்பிடிப்பினால் அது அவரை வேறொரு இடத்திற்கு தற்போது கொண்டு சென்றுள்ளது.
     ஆம்... சாமானிய மக்களின் கலையை ரசிக்கத்தெரிந்த இந்த கலைஞன் இன்று அவர்களின் துயர் துடைக்கும் பிரதிநிதியாக  ’ நாம் தமிழர் ’ கட்சியின் சார்பாக உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.

     எதிர்காலத்தில் அவர் அதிலும் வெற்றி பெற நாம் மனதார வாழ்த்துவோம். அவர் கொண்ட லட்சியதாகம் நிச்சயம் அவருக்கு அந்த வெற்றிக்கனியை பெற்றுத்தரும்.

      உங்களின் இந்த அரசியல் பிரவேசம் பற்றி உங்களது குடும்பத்தாரின் கருத்து என்னவாயுள்ளது? , என்றோம் அடுத்ததாக.

     அப்பா இறந்துவிட்டார். ஆனால் அவர் இறக்கும் தருவாயில் “டேய் முத்துராமா (இது அவரது இன்னொரு பெயர்), உனக்கு சரின்னு பட்டதை துனிஞ்சு செய்யுன்னு சொல்லிட்டு போனார்... ஆகவே அவர் இப்போது உயிரோடிருந்தாலும் இதுபற்றி தன் ஆதரவைத்தான் பதிவு செய்வார். என் மனைவிக்கு என்னுள்ளிருக்கும் எனது கலை, இலக்கிய ஈடுபாட்டையும், சமூக சிந்தனைகளையும் பார்த்துத்தான் என் மீது காதலே வந்தது. ஆகவே அவர்களுக்கு இதில் எவ்விதமான எதிர்ப்புகளும் கிடையாது...”, என்றார்.
    
      காதல் திருமணமா உங்களது திருமணம்... உங்களது பெற்றோர்கள் இதற்கு ஒத்துக்கொண்டார்களா...?, என்றோம்.

      ”சிறு வயதிலிருந்தே எவ்விதமான கெட்ட பழக்கங்களுமில்லாதவன் நான். ஆகவே, எனக்கான என் பருவத்தின் தேடலில் நான் முறையாக தெரியப்படுத்திய என் காதலை அவர்கள் முழுமனதாக ஏற்றுக்கொண்டு அதை அங்கீகரித்தார்கள்...”, என்றார்.
     கனவும், நினைவும் நீயாக என்னுள்ளிருக்கும் போது யார் பிரித்துவிடுவார் நம்மை என்பதாகத்தான் அவரது மனைவி குழந்தகளை அன்போடு இழுத்து அணைத்துக்கொண்டு அவர் சிரித்துக்கொண்டிருந்த புகைப்படத்தை தனது  நாட்குறிப்பு புத்தகத்திலிருந்து எடுத்து  நம்மிடம் காண்பித்தார்.
    
      அம்மாவைப்பற்றி சொல்லவே இல்லையே...?, என்றதும் ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டார். பதில் சொல்ல வார்த்தைகளே இல்லை. சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பிறகு,

     ”அம்மாவுக்கு வயதாகிவிட்டது... அவருக்கு காலைக்கடன்கள் முதற்கொண்டு நான்தான் செய்துவிடுவேன். முதல் நாள் அந்த நைட்டியைப் போட்டுக்கொண்டு அவரை நான் குளிப்பாட்டி விட்டபோது தன்னையும் அறியாமல் தேம்பித்தேம்பி அழுதுவிட்டது எங்க ஆத்தா... இம்மாந்தண்டி வளர்ந்த புள்ளை...  உன்னைப் போயி இப்படியெல்லாம் கஷ்டப்படுத்திட்டேனே ராசா... என அழுதது எங்க ஆத்தா...

     ... நான் கல்லூரிக்குப் போன நாட்களிலேயே எனக்கு உடம்புக்கு வந்து முடியாமல் கிடந்த என்னை நீ இப்படித்தான் குழந்தையா பார்த்தே. அப்படி என்னை பாராட்டி, சீராட்டி பார்த்துகிட்ட உனக்கு இதை நான் செய்யாம வேறு யாரு ஆத்தா செய்யுவா என நான் கேட்டதைப் பார்த்துகிட்டேயிருந்த என் மகன் அந்த பணிவிடைகளையெல்லாம் அவக அப்பத்தாவுக்கு இப்போ அவனே செய்யறான்...” என்றார்.

     - சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு அடக்க முடியாமல் வந்த கண்ணீரை மெலிதாக மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அடக்க முயற்சித்தார்.
      நெடுநேர மவுனத்தின் பின் அவர் சற்றே ஆசுவாசமான பிறகு,
      சரி... உங்களது இயக்கத்தில் ஒரு திரைப்படம் எடுத்தீர்களா...? என்றோம்.
      ”எடுத்துக்கொண்டுள்ளேன்... படத்தின் பெயர் கலிங்கத்துப்பரணி... ”, என்றார்.

     அதென்ன, அது... கலிங்கத்துப்பரணி....?
      தோல்வியின்போது பாடப்படுவது முகாரி.... கலிங்கத்துப்போரில் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்து செயங்கொண்டார் என்னும் புலவரால் பாடப்பட்ட நூல் கலிங்கத்துப்பரணி. ஒவ்வொரு சாமானியனும் தனது வாழ்வில் படிப்படியாக ஜெயித்து, பிறகு தன் வெற்றியை கொண்டாடுகிறான். அப்படித்தான் ஒவ்வொரு இளைஞனும் ஜெயிக்க வேண்டும்... தீய பழக்க வழக்கங்களிலிருந்து மீண்டு சாதிக்க வேண்டும்... தன்னை புறக்கணித்து புண்படுத்தியவர்களும் அதிசயித்து தன்னை ஆலிங்கனம் செய்து கொள்ளும் விதமானதொரு சாதனையைச் செய்து வெற்றியில் களிக்க வேண்டும். அந்த வெற்றியத் தன்னைச் சார்ந்தவர்களோடு சேர்ந்து அவன் ஆனந்தமாக கொண்டாட வேண்டும். அதற்காகத்தான் இந்த டைட்டில்...” என்றார் தோழர் ஐந்துகோவிலான்.
     எனக்கு மெய்சிலிர்த்துப் போனது அதைக் கேட்டதும்.

     வெற்றி என்பது ஒரு மனிதனின் அடையாளம். அதை அடைவது அவனது இலக்காக இருக்கவேண்டுமென்பதாகத்தானிருந்தது அவரது அந்த டைட்டில்.
     வெற்றிக் கொடிகட்டு என்ற இந்த கட்டுரையில் பேட்டி காணும் முதல் நபராக இவரைத் தேர்ந்தெடுத்ததற்கான அர்த்தம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

     ஐந்துகோவிலானென்ற இந்த அர்த்தமுள்ள மனிதன் கலைத்துறையில் மட்டுமல்லாமல், இவர் காலடி எடுத்து வைத்த அரசியல் பிரவேசத்திலும் வெற்றிவாகைகள் சூடி, அன்று கலிங்கத்துப் போரில் பரணிபாடி புகழப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழனைப் போல முடிசூடி வரட்டும். வாழ்த்துக்கள்.

நேர்காணல் : எழுத்தாளர் தென்னவன்,
எழுத்து : கார்த்திகேயன் சுகதேவன்

This meaningful man of five cows is not only in the art sector, but also in the political entrance to his feet, and the second Kulothunga Cholan in the battle of Kalinga. Congratulations.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.