சற்றுமுன்

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எம்.ஜீவன்

ஒருகாலத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான நிலங்கள் பல பிரபுக்களால் தத்தெடுக்கப்பட்டு நகரங்களாக்கப்பட்ட சரித்திரத்தின் பின்னே இருப்பது, பல சமூக ஆர்வலகளின் முனைப்பு இன்றி வேறொன்றுமில்லை. சென்னை, வடபழனி குமரன் காலனியில். கண்முன்னே பரந்து விரிந்து கிடக்கிறது கான்க்ரீட் காடுகள் ( நெடிதுயர்ந்த கட்டிடங்கள் ). அஃதொன்றின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு நமக்காக பாட விழைகிறது அந்த ஊர்க்குருவி. ஆம். ஊருக்கு சேதி சொல்ல ஆசைப்படும் ஓர் குருவி.

     அது வேறு யாருமல்ல. புகைப்படக் கலைஞரும், ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எம்.ஜீவன்தான் அது.

     ஸ்டில்ஸ் ரவியென்ற ஜாம்பவானிடம் தொடங்கி வரிசையாக பலரிடம் பணிபுரிந்து கிடைத்த அனுபவம் அவரையும் ஒரு கைதேர்ந்த படைப்பாளியாக்கியுள்ளதென்றே சொல்லலாம்.

     வடபழனி குமரன் காலனியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் இவரது வீடு. மனைவி, இரு மகன்களோடு அழகான குடும்ப வாழ்க்கை. வீட்டினுள் நுழையும் போதே கூட்டம், கூட்டமாக சேர்ந்து விளையாடும் வண்ணமீன்களின் வாசஸ்தலம் கொண்ட கண்ணாடிப் பேழை. அதனுள் தண்ணீரில் நீந்தும் மீன்கள் நம்மை நோக்கி வந்து அந்த கண்ணாடிச் சுவற்றில் முட்டி மோதி தங்களது வணக்கத்தை தமது மவுனமொழிகளினால் நமக்குச் சொல்கிறது.

     ”வணக்கம் ஜீவன்...”, என்கிறோம்.
     வண்ணமீன்களுக்கும் அந்த வணக்கங்கள் போய்ச் சேரும் விதமாக அதையும் மையமாக ஒருமுறை பார்த்தோம்.

     செம சார்ப் அவர். எமது பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட அடுத்த நொடியே, “என் பசங்க வளர்கறாங்க...”என்றார்.
     பின்னர்தான், “வணக்கம்... உட்காருங்க...”, என்றார்.
     ஆம்!. அவரது பார்வை சரியாக இருக்கிறது. எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குகிறார். தண்ணீரில் அலையும் அந்த மீன்களை ரசிப்பதிலிருந்து.... எமது கேள்வியின் கோணத்தைப் புரிந்துகொண்டு சரியான, பயனுள்ள தகவல்களை பதில்களாக தருவது வரை அனைத்துமே சுவாரஸ்யமாக இருந்தது அந்த நேர்காணலில்.

     அந்த நேர்காணலை இப்போது பார்க்கலாம்.
     உங்களைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகத்தை நீங்களே செய்து கொள்ள வேண்டுமென ஆரம்பித்தோம்.

     அப்பா, அம்மா, தம்பி, தங்கையென்ற பந்தங்கள் கொண்ட விவசாயக் குடும்பம் எங்களது குடும்பம். மதுரை மாவட்டத்தில் சொக்கநாதபுரம்தான் எனது சொந்தஊர். சிறுவயதில் VHS கேமராவில் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த எனது பயணம் என்னை சென்னைவரை கொண்டு வந்துவிட்டது.

     கலைத்துறையின் மீது வந்த ஈடுபாடும், அதை தேர்ந்தெடுத்ததற்கான காரணமும் என்ன?, என்றோம்.

                நான் பழகிய நண்பர்கள் வட்டம், எனது தேடுதல்கள்  அனைத்துமே கலைத் துறையை சார்ந்ததாகவே  அமைந்தது. சிறுவயதில் புகைப்படங்கள் எடுப்பதில் மிக்க ஆர்வமிருந்தது.  நான் எடுத்த புகைப்படங்கள்  சிலவற்றோடு சென்னை வந்தேன். ஸ்டில்ஸ் ரவிசாரிடம் சில காலங்கள் பணியாற்றினேன். பின், அதன் தொடர்ச்சியாக இயக்குனர் மணிரத்னம் சார் படங்களில் பணியாற்ற வாய்ப்பு வந்தது. அதன் பிறகு ச்ங்கர் சார், கவுதம் சார் படங்கள். பின், கொக்கி போன்ற படத்தில் ஒளிப்பதிவாளர் வாய்ப்பு... அடுத்ததாக மயிலு என்ற படத்தில் இயக்குனர் வாய்ப்பு.... இப்படியாக எனது வளர்ச்சி ஒன்றன்பின் ஒன்றாக ஒரே நேர்கோட்டில் போகிறது.
     பல்வேறு ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அந்த இனிமையான அனுபவம் பற்றி சொல்லுங்களேன், என்றோம்.

     இந்த கேள்வியை கேட்டதுமே வெகுவாக சிலாகித்துப் போய் அவர் சொன்ன பதில் நமக்கே ‘டெம்ப்டிங்’காக இருந்தது.
     சங்கர் சாரின் ஜீன்ஸ் பட ஷூட்டிங்கில் உலகத்தின் ஏழு அதிசயங்களையும் கண்முன்னே பார்த்தேன் சார்... அதிலும் எட்டாவது அதிசயமாக என் கேமராவின் வியூ ஃபைண்டர் வழியாக நான் பார்த்த ஐஸ்வர்யாராய்... ப்பா... ஐ ஆம் ரியலி எக்ஷைட்டட்... உலகஅழகி... அவரை படம் எடுக்க எங்கோ சொக்கநாதபுரத்திலிருந்து புறப்பட்டு வந்த எனக்கு அது வாய்த்திருக்கிறது என்றால் சும்மாவா?.... அந்த ஒரு நொடி எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை எண்ணி நானே நெகிழ்ந்து போனேன், என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.
     பின், அடுக்களையில் சமையலில் இருந்த தன் மனைவியை ஒரு தரம் எட்டிப் பார்த்துக் கொண்டார்.
     அங்கிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லாததால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக் கொண்டார்.
     அற்புதமான தருணம்... அந்த படத்தில் சங்கர் சாருடன் ஒர்க் பண்ணின அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?...

     வெயிலோ, குளிரோ, மழையோ.... தேனீ போல இருப்பார் சங்கர் சார். மைனஸ் டிகிரி செண்டிகிரேட்ல கூட ஷூட்டிங் எடுத்திருக்கோம்.அப்பவும் இயல்பான உற்சாகத்தோட ஒர்க் பண்ணின அவருடைய டெடிகேஷனை பார்த்தா யாரா இருந்தாலும் அசந்து போயிடுவாங்க...

     மணிரத்னம் சாரை இருவர் பட ஷூட்டிங்கில் நீங்க பார்த்திருக்கணுமே.. ஊட்டியில காலையில எட்டு மணிக்கே அப்படியொரு குளிர் அடிக்கும்... ஆனா, அந்த அதிகாலை நேரத்திலேயும் வந்து தன்னுடைய ஸ்கிரிப்ட்டை படமாக்கணும்னு தவம் கிடந்த அந்த படைப்பாளியை நேரில பார்த்தவன் எவனும் சத்தியமா தூங்க மாட்டான். அப்படி ஒரு டெடிகேஷன்... தன்னோட எழுத்தை வரி,வரியா ரசிச்சு ஒவ்வொரு வரியையும் அத்தனை சிரத்தையோட செதுக்குவார். கவுதம் சாருடைய ஒர்க் ஸ்டைலும் அப்படித்தான். இந்த ஷாட்டை அப்புறம் எடுத்துக்கலாம்... இன்னொரு நாள் வச்சுக்கலாம்னெல்லாம் கிடையாது. அடுத்து, அடுத்துன்னு ரொம்ப ஆக்டிவா ஓடுவார். இவங்ககிட்டேயிருந்து கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு சார்.... என்றார்.

     அவர் சொன்னதிலிருந்து நமக்கு ஒன்று தெளிவாகப் புரிகிறது...
     அவர்களுடைய அந்த அர்ப்பணிப்புதான் இன்றைக்கும் அவர்களை உச்சத்தில் வைத்திருக்கிறதென்பதுதான், அது.

      நீங்கள் இயக்கிய மயிலு திரைப்படம் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
     எங்க சொந்த ஊர் சொக்கநாதபுரத்தில் நடந்த ஒரு விஷயத்தைத்தான் இங்கு பதிவு பண்ணியிருக்கிறேன்.ஒரு எதார்த்தமான கலைப்படம்தான் அது.
     ஒளிப்பதிவாளரா இருந்த நீங்க ஏன் திடீர்னு இயக்குனராக ஆசைப்பட்டீங்க...?. நடிகர்கள் இயக்குனர்களாகறதும், இயக்குனர்கள் நடிகர்களாகறதும் ஏன்?.என்ன ஆரோக்கியமான காரணம் இதன் பின்னே இருக்கிறது?

     ஏன் ஆகக்கூடாது. ஒரு படத்துல ஒளிப்பதிவாளரா ஒர்க் பண்ணும் போது, அந்த படம் சம்பந்தமாக நாம சொல்லும் சில விஷயங்கள் ஜெயிக்குது.அதுல உண்டான தன்னம்பிக்கைதான் நாமளும் படம் இயக்குனா என்னன்னு தூண்டுச்சு. இது ஒரு முயற்சிதான். ஆரோக்கியமான கரணம்னா, தன்னம்பிக்கையோட தூண்டுதல்தான்.

     சினிமாவை நீங்க எப்படி பார்க்கறீங்க... தொழிலுக்காக மட்டுமா... அல்லது ஆத்மார்த்தமான ஒரு புரிதல் கொண்ட ஒரு கலையாகவா?

     அதான் நான் முதலிலேயே சொல்லிட்டேனே...என்னை சார்ந்த எல்லா விஷயங்களிலும் நான் சினிமாவைப் பார்த்து வளர்ந்தேன்.அது என்னை வளர்த்து, எனக்குள் அது வளர்ந்தது.

     இந்த சினிமாவிற்கு உங்களுடைய குடும்பத்திலிருந்து வேறு யாராவது வந்துள்ளார்களா?.

     என் உடன்பிறந்த சகோதரரும் ஒரு ஒளிப்பதிவாளர். பெயர் சுகுமார். மைனா, கும்கி போன்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். என் மகன் விஜய் கிரண் 19 வயதிலேயே  நையப்புடையென்ற எஸ்.ஏ.சந்திரசேகர் சார் நடித்த படத்தை இயக்கியுள்ளார்.

     ரொம்ப சந்தோஷம். மைனா, கும்கி, நையப்புடை படம் நாங்களும் பார்த்திருக்கோம். எஸ்.ஏ.சி 72 வயதில் பறந்து பறந்து சண்டைபோடுற காட்சிகளையெல்லாம் 19 வயது யூத்ஃபுல் டைரக்டரான விஜய் கிரணாலதான் பண்ணமுடியும். பண்ணிட்டார். எஸ்.ஏ.சியும் நடிச்சுட்டார். வெரிகுட். அவருடைய பயணம் இனிதே அமையட்டும். கும்கியில் அருவி விழும் உச்சிப்பாறையிலிருந்து காதல் சொன்ன அந்த அற்புதமான காட்சியையும் அவ்வளவு எளிதாக எந்தவொரு சினிமா ரசிகனும் மறக்கமுடியாது.சுகுமாருக்கும் எங்களது வாழ்த்துகள். அப்புறம் வெற்றிக் கொடிகட்டுங்கற எங்க நேர்காணலுடைய தலைப்புக்கான ஒரு கேள்வி....,என்றோம்.

     ”கேளுங்க...”, என்றார்.
     பொதுவா எல்ல பிரபலங்ககிட்டேயும் நாங்க இந்த கேள்விக்கான பதிலை ஆவலோட எதிர்பார்க்கிறோம்...
     ”ம்ம்...”
     வெற்றிக்கான இலக்கா நீங்க எதை  நினைக்கறீங்க... பணமா?, புகழா?... அல்லது இரண்டுமா?... என்றோம்.
     கண்டிப்பா பணமோ, புகழோ கிடையாது... ஆனா உங்களை சேர்ந்தவங்க அதைத்தான் உங்களுக்கான இலக்கா நிர்ணயிப்பாங்க. உங்களால முடிஞ்ச ஒரு நல்ல விஷயத்தை இந்த சமூகத்துக்கு கொடுக்கறதுதான் என்னைப் பொறுத்தவரை வெற்றி. வாழற காலத்துல நாம செய்யற நல்ல பதிவுகள்தான் காலங்களைக் கடந்தும் நிக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜின்னு நீங்க நினைச்சுப் பார்க்கும் போதெல்லாம் அவங்களோட பொருளாதார வளர்ச்சியா நம்ம கண்முன்னால நிக்குது?... அவங்க சாதிச்ச அந்த சரித்திரங்கள்தானே நமக்கு அவங்களை இன்னமும் அடையாளம் காட்டுது.
     ஒரு புகைப்பட கலைஞரா சினிமாவுக்குள்ள நுழைஞ்சு, ஒளிப்பதிவாளராகி, அடுத்த கட்டமா மயிலுன்னு ஒரு படமும் இயக்கிட்டீங்க... இது உங்களுடைய நல்ல பதிவுதான். அப்படிப் பார்த்தா நீங்களும் வெற்றியடைஞ்சுட்டீங்கன்னுதான் சொல்லணும். இந்த வெற்றிங்கற விஷயம் நமக்கு எவ்விதம் கிடைக்கிறது?... பணத்தாலா?... உழைப்பாலா?... என்றோம்.
     அதற்கு அவர்,  நீங்க அதிர்ஷ்டத்தாலாங்கிற இன்னொரு கேள்வியையும் சேர்த்துக்கோங்க... என்றார்.

     ஏன்?... என்றோம்.
     சினிமாவுல பல படங்கள் நமது எதிர்பார்ப்பையும், உழைப்பையும் மீறி ஏன் ஓடுகிறது?.... ஓடவில்லையென சொல்லவே முடிவதில்லை. ஆனாலும் உழைப்பில்லாம யாரும் வந்துட முடியாது. அதுதான் மறுக்க முடியாத உண்மை என்றார்.
     இரண்டில ஏதாவது ஒன்னைச் சொல்லுங்க... வெற்றிக்கு தேவை உழைப்பா?... அதிர்ஷ்டமா?....
     சாரி சார். என்னை மூட நம்பிக்கை கொண்ட ஆள்னு நீங்க நினைச்சாலும் பரவாயில்லை. என்னை பொறுத்தமட்டிலும் இது ரெண்டுமே வேண்டும்.இப்போ என்னையே எடுத்துக்கோங்க... மணிசாரோட படங்களையெல்லாம் பார்க்க முடியுமான்னு நினைச்சுக்கிட்டிருந்த நான் அவரோட அடுத்தடுத்த புராஜெக்டுல ஒர்க் பண்ண முடிஞ்சது.அதுக்கு என்னோட இடைவிடாத உழைப்பும்,முயற்சியும் ஒரு காரணம்னா, சரியான நேரத்துல ஏதோவொரு நல்ல சந்தர்ப்பத்துல அந்த வாய்ப்பு எனக்கு அமைந்ததுன்னுதான் நான் சொல்லுவேன்.இதை என்னால பிரிச்சு சொல்ல முடியாது என்கிறார் ஒரு எதார்த்த தொணியில்.

     சினிமாவில் வெற்றிகள் கண்ட இவரே இப்படிச் சொன்னால் புதிதாக வருபவர்களும் அதிர்ஷ்டம்தான் முக்கியமென்று சோம்பலாக திரும்பிப் போய்விடுவார்களோவென்றுதான் நமக்கு தோன்றுகிறது.

     ஆனால் உழைப்பின்றி எதுவுமில்லை.அதையும் இவரேதான் சொல்கிறார்.
     ஆம்.செய், அல்லது செத்து மடியென்ற அந்த உன்னதமான வரிகள்தான் அவரை சந்தித்து விடைபெற்று திரும்பும்போதும் நம்முள் திரும்பத் திரும்ப ரீங்காரமிடுகிறது.


நேர்காணல் & எழுத்து : கார்த்திகேயன் சுகதேவன்



Cinematographer and director M.Jevan interview by


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.