சற்றுமுன்

நாச்சம்மை வீடு - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை

மெய்யப்பண்ணா வந்துவிட்டான். டாலஸிலிருந்து ஃப்ராங்க் ஃபர்ட். ஃப்ராங்க் ஃபர்டிலிருந்து சென்னையென பறந்து, பறந்து வந்து சென்னையிலிருந்து ஒக்கூருக்கு சொகுசுக் காரில் வந்து எங்கள்  நாச்சம்மை வீட்டில் அவன் இறங்கியபோது சொந்த பந்தமெல்லாம் பர,பரத்தது.
     ஆச்சியும்,அய்த்தானும் வாயெல்லாம் பல்லாகிப்போனார்கள். தம்பியொண்டிக்கு கூட சந்தோஷம் தாளவில்லை. இருக்காதா, பின்னே... மெய்யப்பன் போடப்போகும் அந்த கையெழுத்துக்கு முள்ளங்கிப் பத்தையாய் மூன்றுகோடி ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைக்கப்போகிறதே...
     எல்லோரும் பேசி முடிவு செய்தபிறகு  நாச்சம்மை வீட்டை விற்கவேண்டுமென நான்தான் முதலில் மெய்யப்பண்ணாவுக்கு ஃபோன் செய்து கேட்டேன்.
     "அண்ணே... நம்ம நாச்சம்மை வீடு ரொம்ப பழசாகிடுச்சுண்ணே... சுவரெல்லாம் கூட உளுத்துப்போச்சு...”
     ”அதுக்கு...”
     ”ஆச்சியும், அய்த்தானும் வித்துப்போடலாமுன்னு யோசனை சொல்லுறாக...”
     ”காரைக்குடியில அவரு வூடுமட்டும் நல்லாருக்குதாம்மா... ஏன் அதைப்போயி விக்கட்டுமே இவரு...”
     ”அதில்லைண்ணே... ஆளு பேரு அதிகமில்லாம இதை பராமரிக்கறதே சிரமமாயிருக்கு... அவரு சொல்லுறதும் ஓரளவுக்கு  நிசந்தானே..”
     ”வேணுமின்னா இன்னும் ஆயிரம், ரெண்டாயிரம் அதிகமா அனுப்பி வைக்கறேண்டா... அதை வச்சு பார்த்துக்கிடலாமே...”
     ”இல்லைண்ணே... வெறுமனே காசு மட்டும் செலவு செய்துக்கிட்டு ஏன் வச்சுக்கணும்கறா நம்ம தம்பியொண்டி... அவ சொல்லுறதும் நியாயம்தானே... இந்த வீட்டாலே யாருக்கு என்ன லாபம் சொல்லுங்க...”
     ”அது நம்ம முப்பாட்டனார் நம்ம முப்பாட்டியோட ஞாபகமா அவுக பேருல கட்டின வீடுடா... நம்ம பாரம்பரிய கவுரவம்டா...”
     ”நானும் அப்படித்தான் சொன்னேன். ஆனா வயிறு கூழுக்கு அழும்போது, கொண்டை பூவுக்கு அழுவுமாங்கறா தம்பியொண்டி... உண்மையாவே அவனும் ரொம்ப கஷ்டப்படத்தாண்ணே செய்யுறான்...”
     எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. அதன்பிறகு அண்ணன் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு பேசவே முடியாமல் நின்றுவிட்டானென்று அண்ணமுண்டி பிற்பாடு ஃபோனில் பேசியதிலிருந்துதான் தெரிந்தது எனக்கு.
      நெடுநாள் போராட்டத்திற்குப் பிறகுதான் மெய்யப்பண்ணா இதற்கு ஒத்துக்கொண்டான். அதற்காகத்தான் அவன் இப்போது டாலஸிலிருந்து ஒக்கூர் வந்திருக்கிறான்.
     அண்ணமுண்டி ஒரு சுற்று பெறுத்துவிட்டார்கள். மெய்யப்பண்ணாவும்தான். அவனது இரண்டாவது பிள்ளை சரவணனுடன் எங்கள் வீட்டு வாண்டுகள் ஓடிப் போய் ஒட்டிக்கொண்டதுகள்.
     சரவணன் வாஞ்சையாக குழந்தைகளை அணைத்துக்கொண்டான்.
     என்னைப் பார்த்து, ”ஹாய் சித்தப்பா...” என்றான்.
     கரைச்சான் மண்டையும், கடுக்கனுமாக இருபத்தைந்து வயதில் பார்த்த மெய்யப்பண்ணாவை மாடர்னாக பார்ப்பது போலிருந்தது, அவனைப்பார்க்கையில்.
     ”ஹாய்... ஹவ் ஆர் யூ...”, என்றேன்.
     ”நல்லாருக்கோம் சித்தப்பா...” என்றான்.
     நன்றாக தமிழ் பேசினான். அவன் பேசப்போகும் ஆங்கிலத்துக்காக காத்துக்கொண்டிருந்த என் குழந்தைகளுக்குத்தான் ஏமாற்றமாகப் போய்விட்டது.
     ”நல்லா தமிழ் பேசறேடா...”
     ”தமிழ் கடல் கடந்தும் நல்லாத்தாண்டா வாழுது...”, என்றான் மெய்யப்பண்ணா.
     ”சந்தோஷம்...”
     ”காப்பி குடிக்கிறீயளா...” - ஆச்சி கேட்டாள்.
     ”இருக்கட்டும்... பொறவு குடிக்கலாம்... ”
     ”உட்காருங்க...”
     அய்த்தான் ஏற்கனவே வாட்டர் கூலர்களை வரிசையாக முன் வைத்து அமர்வதற்கு சொகுசு நாற்காலிகளை பட்டாலையில் தயார் செய்து வைத்திருந்தார்.
     ஆச்சி அரக்க, பரக்க ஓடிப்போய் தன் சேலை முந்தானையில் அவைகளை மெப்பனைக்குத் துடைத்தாள்.
     ”போதும் செல்லம்மை...  நாங்க உட்காருதோம்...” என்றபடியே அங்கு போய் உட்கார்ந்தான் மெய்யப்பண்ணா...
     மெய்யப்பண்ணாவுக்குத் தெரியும்... அந்த உபசரிப்பில் பாசமும் இருக்கிறது... பணம் கைக்கு வரப்போகிறதென்ற சந்தோஷமும் இருக்கிறதென்று.
     என்ன செய்ய... பணம் எல்லாம் செய்யுமே... காசு கொடுக்கப் போகும் கவுரவமும், அந்தஸ்தும், இனி காலத்துக்கும் கூட வருமே... சொகுசாக படுத்துக்கொண்டே வாழலாமே...
     அப்பத்தா சிறு வயதில் சொன்ன பல வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருக்கிறது...
     அதில் ஒன்று, “குந்தித் தின்றால் குன்றும் மாளும்...” என்ற சொலவடை. அப்பத்தா அது போல நிறைய சொல்லும்.
     எங்கள் வமிசத்து ஆட்கள் படுத்து அனுபவிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கக்கூடாதாம். பத்து பைசாவைக் கூட கெட்டியாகப் பிடித்து வைக்கத் தெரியவேணுமாம்... இதை ஆத்தாளுக்கும் அப்பத்தா அடிக்கடி சொல்லும்.
      நாம் சேமிக்கும் காசு நமது கண்ணுக்குப் பின் நமது சந்ததிகளுக்குப் போய்ச்சேரவேண்டுமாம். அதை கவனமாக பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது மூத்தாரின் கடமை என்பது அவளது எண்ணமாக இருந்திருக்கலாம்.
     இல்லையென்றால் இவ்வளவு சேர்ந்திருக்குமா...  
     பரம்பரை, பரம்பரையாக ஓடி, ஓடி சேர்த்த காசு இது. வாழ்ந்த தலைமுறை இனி வாழப்போகும் தலைமுறைக்காக செய்த தியாகம் இது.
     அவர்கள் வழியிலேயே  நாமும்  நமது சந்ததிகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
     மூத்தவன் பழனியப்பன் வரவில்லை. அவன், அமெரிக்காவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து காதல் திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டான். அண்ணமுண்டி அது விஷயமாய் ஒரு நாள் போனில் பேசியதைக் கேட்டுத்தான் அப்பச்சி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்தார் சாய்வு நாற்காலியில்.
     மெய்யப்பண்ணா வந்ததில் வீடே குதூகலப்பட்டிருந்த அந்த வேளையிலும் எந்தவிதமான அசைவுகளுமின்றி அப்படியே கிடந்த எங்கள் வீட்டின் இன்னொரு ஜீவனையும் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தியே ஆகவேண்டும். அது வேறு யாருமில்லை. எங்கள் ஆத்தாதான் அது.
     ஆண்களெல்லாம் ஒன்றாகக் கூடிப் பேசும் இடம் பட்டாலை. அரண்மனையைப் போலிருக்கும் எங்கள் வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் அங்கிருந்துதான் அது தொடங்கும். வீட்டிற்குள்ளேயே மிக உயரமாக இருக்கும் இடம் அந்த பட்டாலை. அங்கு போடப்பட்டிருந்த அந்த சாய்வு நாற்காலியில்தான் எங்கள் அப்பச்சி அன்று அப்படிச்சரிந்தார். வெகு நாட்களுக்குப் பிறகு அதில் அமர்ந்தபடியேதான் அவர் தன் உயிரையும் விட்டார். அன்றிலிருந்து ஆத்தாவும் அந்த சாய்வு நாற்காலியில்தான் ஸ்மரணையின்றிக் கிடக்கின்றாள்.
     மெய்யப்பண்ணா குடும்பத்துக்கு போடப்பட்ட இருக்கைக்கு சற்று அருகில்தான் ஆத்தாவும் அமர்ந்திருந்தது.
     ஆத்தாவுக்குத் தெரியுமா..., மெய்யப்பண்ணா வந்ததும், அவன் எதற்காக ஒக்கூருக்கு வந்திருக்கிறானென்றும்.
     மருத்துவர்கள் ஆத்தாவுக்கு நினைவு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவளுக்கு விருப்பம் இல்லாதபடியால்தான் அப்படிப் பேசமறுத்துக் கிடக்கிறாளென்றும் சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அந்த நம்பிக்கையில்லை. அந்த தைரியத்தில்தான் வீட்டை விற்க முடிவு எடுத்தோம்.
     ”ஆத்தாகிட்ட பேசட்டுமாடா...”
     - மெய்யப்பண்ணா மருகிப்போய் நின்றான்.
     யாரும் பதில் பேசவில்லை. பொல, பொலவென கண்ணீர் விட்டான். மனசு பொறுக்கவில்லை. எனக்கும் அழுகை வந்தது. அவ்வளவு நேரமும் சந்தோஷமாக இருந்த ஒட்டுமொத்த குடும்பமும் இப்போது துவண்டு போனது.
     நான் அழுதபோது அழுது...  நான் சிரித்தபோது சிரித்து... எனக்காக வாழ்ந்த என் சொந்தமே... உன்னைவிட வேரென்ன வேண்டுமெனக்கு...
     நாளைக்கு காலையில் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு சொல்லியிருக்கிறார் அய்த்தான். பார்ட்டி பணத்தோட வந்துடுவானாம். மறுநாள் காலையில ரிஜிஸ்ட்ரேஷன் என்பதால் இன்றைக்கு மதியம் சாப்பாடு ஆனதுமே கண்ணாத்தாள் கோவிலுக்கு போகவேண்டுமென ஏற்கனவே அண்ணமுண்டி ஃபோனில் எங்களுக்கு சொல்லியிருந்தார்.
     ஆகவே மாலையில் கோவிலுக்கு போகும்போது சாப்பிடுவதற்கு பலகாரங்களெல்லாம் தயாராகிக்கொண்டிருந்தது.
     இந்த பலகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
     அப்போது ஆத்தா கந்தரப்பம், கருப்பட்டி பனியாரம், சீப்புச்சீடை, உக்கரை, வெள்ளைப்பனியாரம், பால்பனியாரம், தேன்குழல், கவுனியரிசி, மனகோலம் போன்ற இன்னும் பிற அயிட்டங்களும் வித, விதமாக நிறைய செய்து தரும்.
     அடுப்படிக்குப் பக்கத்தில் பலகாரங்களுக்கு மாவு தயார் செய்வதற்காக குந்தாணிக்கல், அரவைக்கல் என்றிருக்கும். இது போக இட்டிலிக்கும், தோசைக்கும் மாவு எடுக்க ஆட்டுக்கல்லும், சட்டினிக்கு அம்மிக்கல்லும் இருக்கும். தடுக்கி விழுந்தால் இதில் ஏதேனும் ஒன்றில் விழுந்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
     குழந்தைகளெல்லம் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது எதற்காகவோ கோபத்தில் ஆச்சி என் தம்பியை அந்த ஆட்டுக்கல்லில் பிடித்து தள்ளிவிட்டது. அதில் மோதிய தம்பி கண்ணப்பனுக்கு லேசாக தலையில் அடிபட்டுவிட்டது.
     "அய்யய்யோ... எலே சின்னவனே... ஆத்தாகிட்ட சொல்லிடாதடா... நான் உனக்கு பலகாரம் எடுத்து தாரேன்டா...” என்றாள் ஆச்சி பதறிப்போய்.
     ”எனக்கு...”
     - மெய்யப்பனும், நானும் கூடச்சேர்ந்து கேட்டோம்.
     ஆச்சி வேறு வழியில்லாமல் எல்லோருக்குமாக சேர்த்து பலகாரத்தை எடுத்து வந்து தந்தது. அதற்கு முன்,
     ”ரத்தம் வருதே... எப்படி நிறுத்தறது...”
     ”காப்பித்தூளை எடுத்து வெச்சா சரியாயிடும்... வீட்டு இண்டு, இடுக்குகள்ல ஒட்டியிருக்கற  நூலாம்படைகளையும் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க... அதையும் வச்சா நல்லது...”
     என தம்பியின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு கொஞ்சம் காப்பிப்பொடியும், நூலாம்படையும் எடுத்து வந்து வைக்கப்பட்டது.
     உசரமான மர பீரோவின் மீது கொட்டானிலும், மங்குச்சாமானிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பலகாரங்களை ஆத்தாவுக்குத் தெரியாமல் ஸ்டூலைப் போட்டு எடுப்பதற்கான தைரியமும், உசரமும் ஆச்சிக்கு மட்டும்தான் உண்டு.
     ஆனால் பிள்ளைகளுக்கு தலைக்கு எண்ணெய் தடவி விடும்போது ஆத்தா தம்பிக்கு அடிபட்டதையும், ஆச்சியின் திருட்டுத்தனத்தையும் கண்டுபிடித்துவிட்டது.
     அப்பாவிடம் ஒரு பழக்கம் உண்டு. கோபம் வந்தால் பெல்டை எடுத்து விளாசி விடுவார். அன்றும் அப்படித்தான் அது முடிந்தது.
     வீட்டில் எல்லோரும் கண்ணாத்தா கோவிலுக்குச் சென்றபின்  நானும் என் மனைவியும் மட்டும் ஆத்தாவுக்குத் துணையாக வீட்டிலேயே இருந்தோம்.
     ஆத்தா ஏதோ முனகும் சப்தம் கேட்டது.
     ”ஆத்தா... என்னத்தா வேணும்...”, என்றேன் அருகில்போய்.
     ”கண்ணப்பன் சாப்பிட்டானா...”
     அவள் என் தம்பியைப் பற்றித்தான் கேட்கிறாள்.
     ”ம்ம்... சாப்பிட்டான் ஆத்தா...”
     ”மூத்தவன் சீமைக்குப் போயிட்டான்... சின்னவன் அயித்தமவ வாலைப்புடிச்சுக்கிட்டு திரியுறான்... இந்த மங்குனிப்பயலுக்கு ஆருலே இருக்காக...”,என்று ஆத்தா அழ ஆரம்பித்துவிட்டது.
     ”நீ கவலைப்படாதே ஆத்தா... அவனுக்கும் ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடலாம்...”, என்றேன்  நான்.
      நான் என் அயித்தை மகளான என் மனைவியை காதலித்தது மட்டும்தான் ஆத்தாளின் ஞாபகத்தில் உள்ளது. எங்களுக்கு கல்யாணம் ஆனதும், அதன்பின் தம்பிக்கும் ஆனதும் அவளுக்கு அவ்வப்போது மறந்துவிடுகிறது.
     இந்த வீடு காதலையும், கல்யாணத்தையும் மட்டும் கண்ட வீடு இல்லை. எவ்வளவோ கஷ்ட, நஷ்டங்களையும் கண்ட வீடு.
     எல்லா நேரங்களிலும் எங்களோடு கூட வந்த இன்னொரு சொந்தம் இந்த வீடு...
     அதனால்தான் இதை இப்படி அனாதரவாக விட்டுச்செல்வதை நினைத்து; ஏதோ சொந்தத்தையே விட்டுப் போவதைப் போல வலிக்கிறது...
     திரும்பிய பக்கங்களெல்லாம் ஞாபகச்சுவடுகளும்... பட்டுத் தெறித்து எதிரொலித்த எங்கள் சொந்தங்களின் குரல்களும்... ஒவ்வொரு சுவர்களுக்கும் சொந்தமாக கண்முன்னே நின்று மனதை அரிக்கிறது.
     ரத்தத்தின் ஒவ்வொரு செல்களும் வேதனையைச் சுமந்து அழுகிறது, சத்தியமாக...
     ஆனாலும் நிறுத்தத்தான் முடியுமா இதை...
     காலத்தின் கட்டாயம்...
     மாறும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொண்டு போகவேண்டிய நிர்ப்பந்தம்...
     என்ன செய்வது...
     மறுநாள் பொழுது விடிந்தது. ஆதவன்கூட சற்றே அழுது வடிந்துதான் மேக மூட்டத்தினிடையே மெலிதாக எட்டிப்பார்த்தான்.
     ”ஏங்கறேன்... ”
     ”ம்ம்... “
     ”உங்களைத்தான்...”
     ”ம்ம்...” என்று மறுபடியும் ஒற்றை வார்த்தையை மட்டும் சொன்னேன்.
     எனக்கு நெஞ்செல்லாம் கனத்திருந்தது.
     ”உங்களிட்டதான் கேட்கறேன்... ”
     -என் மனைவி காப்பித்தம்ப்ளரும், டபராவுமாக நின்றிருந்தாள்.
     “என்ன வேணும்... சொல்லு...”
     ”நம்மூரு சசிவர்ண பிள்ளையாரை ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுவோமா...”
     ”ம்ம்...”
     ”வேற வழியே இல்லையா... ”
     ”இல்லையாம்... மனையடி சாஸ்திரப்படியே ஒரு வீட்டுல மூனு தலைமுறைகளுக்கு மேல வாழக்கூடாதாம்... ஜோஸியக்காரரு சொல்லுறாரு...”
     ”உங்க அய்த்தான் சொல்லச்சொல்லி காசு கொடுத்திருப்பாரு... அவருக்கு காசு ஆசை... “
     ”சத்தம் போட்டு சொல்லாதே... ஆச்சி காதுல விழுந்துடப் போவுது... பொறந்த மவ வேதனைப்படக்கூடாது...“
     ”ம்க்கும்... எங்க ஆத்தாளுக்கு உங்க ஆத்தா கொடுத்த மரியாதையெல்லாம் மறந்துடுச்சோ...”
     ”நேரம்கெட்ட நேரத்துல கண்டதைப் பேசாதே... சம்பந்தியா சண்டை எல்லா வீடுகள்லயும் இருக்கறதுதான்...”
     ”சரி அதை விடுங்க... உங்க பங்காளி நாச்சியப்பன் வீட்டுல என்ன நடந்துச்சு... பழங்காலத்து வீடு... உத்திரம் இடிஞ்சு விழுந்து அவுக அப்பச்சியே செத்துப்போனாரு... அதுக்காக வித்துட்டா போயிட்டாக... இடிச்சு அப்பார்ட்மெண்டு கட்டி ஒவ்வொருத்தரும் அதே இடத்துல வாழலையா...”
     ”....  ....  ....”
     ”இனி எப்போ, எங்கே இதுகள்லாம் ஒன்னா கூட முடியும்...”
     ”....  ....  ....”
     ”எனக்கு மட்டுமில்ல... உங்க அண்ணமுண்டிக்கும் கூட இது பிடிக்கலை...”
     ”அதுக்கு நாம மட்டும் புலம்பி என்ன ஆகப்போவுது....”
     ”பிள்ளைகள்லாம் இந்த நாச்சம்மை வீட்டை விட்டுட்டு சின்ன வீட்டுக்கு எங்களை கூட்டிட்டு போகப் போறீயாம்மான்னுதுக... சின்ன வீட்டுல இதைப் போல ஓடியாட முடியுமான்னு கேட்குதுங்க... நான் என்ன பதில் சொல்லமுடியும் சொல்லுங்க... ”, என்றாள்.
     நான் எதுவும் பேசவில்லை. எனக்கும் பதில் தெரியவில்லை...
     ”எங்க அப்பாவுடைய காலத்தில ஆத்துத்தண்ணி கிடைச்சது... என்னோட காலத்துல கிணறு கிடைச்சது... உம்புள்ளைக காலத்துல அதுகூட கிடைக்குமா தெரியாதுடா...” என்பார் எங்கள் அப்பச்சி.
     தீர்க்கதரிசி அவர். இப்போது நாங்கள் போகப்போகும் புதுவீட்டில் போர் தண்ணிதான். என் பிள்ளகளுக்கு தண்ணி எங்கிருந்து வருகிறதென்றே தெரியாது. அவர்களுக்கு இந்த நாச்சம்மை வீடும், எங்களின் கூட்டுக்குடும்ப கலாச்சாரமும்கூட அதைப்போல மறந்துபோனாலும் போய்விடும்....
     காலம் அவர்களுக்கு அப்படியொரு பாடத்தை சொல்லிக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
     வீட்டில் பிள்ளைகளெல்லாம் எழுந்துவிட்டார்கள் போல... ஒன்றுக்கொன்று ஓடிப்பிடித்து விளையாடும் சப்தம் கேட்டது. இனி  நடக்கப் போவது தெரியாமல் அந்த வீட்டை அரக்க, பரக்க வலம் வந்ததுகள் அந்த சிறுசுகள். இனி இச்சப்தம் இந்த வீட்டில் கேட்காது. இந்த ரீங்காரம் இங்கு ஒலிக்காது... ஒவ்வொரு தூணாக, ஒவ்வொரு ஜன்னலாக பிரித்தெடுத்துப் போய்விடுவார்கள். சுவர்கள் கூட ஒரே நாளில் நொறுக்கப்பட்டுவிடும். தளத்தில் பதிக்கப்பட்ட பட்டியக்கற்கள் பார்த்துப் பார்த்து பெயர்த்தெடுக்கப்பட்டுவிடும். முகப்பும், வளவும், ஆல்வீடும், பல அடுக்குகளும் கொண்ட எங்கள் நாச்சம்மை வீடு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இங்கு இருக்காது. வெட்ட வெளியாகிவிடும். இருந்த இடம் தெரியாமல் காணமல் போய்விடும்...
     பல தலைமுறைகளின்      பாசத்தைக்கண்ட இந்த வீடு இனி இல்லாது போய்விடும்...
     காலம் கடந்தும் பழைய வரலாறுகளை ஞாபகப்படுத்தும் இந்த நினைவுச்சின்னம் இனி மண்ணோடு மண்ணாகிவிடும்...
     எங்கள் நாச்சம்மை வீட்டிற்கு ஏற்படப் போகும் முடிவு பற்றி நான் அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது....
     அது தன் ஒவ்வொரு இலைகளாய் இழந்து, தனிமரமாய் வெயிலில் தகிக்கப் போவதாய் நான் எண்ணிக் கொண்டிருக்கும் போது....
     பட்டாலையில் மெய்யப்பண்ணாவின் குரல் திடீரென்று அலறிக் கூப்பாடு போட, ‘என்ன, ஏதென்று...’ அங்கு கூடிய ஒட்டு மொத்த குடும்பமும் உறைந்து போனது.
     காரணம், பட்டாலையில் ஒத்தையாக ஈஸி சேரில் சாய்ந்திருந்த எங்களின் பாசத்திற்குரிய ஆத்தா இறந்துவிட்டது.... உடம்பும், உயிருமாய் வாழ்ந்த இந்த வீட்டின் மண்ணிலேயே உயிரை விட்டு, இங்கேயே உயிராய் கலந்துவிட்டது.
     ஆம், இந்த நாச்சம்மை வீட்டை விட்டு வேறு எங்கு போகும் அந்த உயிர்...???.
     மருத்துவர்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆத்தாவுக்கு நினைவு இருந்திருக்கிறது. இந்த நாச்சம்மை வீடு எங்கள் கையை விட்டு போவது அதற்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் எங்களுக்கு முன்னேயே இதே இடத்தில் அது தன் உயிரை விட்டுவிட்டது.
     எங்கள் ஆத்தாளை நாங்களே கொன்றுவிட்டோம்....
     எனக்கு அடிவயிற்றில் பகீரென்றது!.   


tamil short story about nachiyammai horor story deccribe about home veedu-tamil-short-story Nivamtham's house - Karthikeyan Sugudavan - short story

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.