சற்றுமுன்

அரசனுக்கு பாடம் கற்பித்த அடியார் - சிறு கதை


ஒரு ஊரில் மகான் ஒருவர் இருந்தார். இறைவனை புகழ்ந்து பாடல்கள் இயற்றி அவற்றைப் பாடியவாறே பிச்சை எடுப்பார். பிச்சைப் பொருளை அவர் மனைவி சமைப்பார். அதை துறவிகளுக்கு அளித்தது போக, மீதியை உண்பார். எளியவரான அந்த மகானின் செயல்பற்றி, அந்த நாட்டு மன்னரின் காதிலும் விழுந்தது.
“வாழ வசதியும், உழைக்க மனதும் இல்லாதவர்கள் மகான் என்றும், துறவி என்றும் சொல்லிக்கொண்டு, உழைக்காமல் உடல் வளர்க்கின்றனர். இவர்களுக்கு மட்டும் செல்வம் கிடைத்தால் கடவுளை அடியோடு மறந்து விட்டு, மற்ற எல்லோரையும் போல ஆடம்பரமாகவே வாழ்வார்கள்” என அந்த ராஜா கூறினார்.
அவரது அமைச்சரோ, “அரசே! இப்படி பேசி அடியார்களை இழிவுபடுத்தாதீர்கள்,” என அறிவுரை கூறினார். ஆனால் அரசர் அவர் பேச்சைக் கேட்கவில்லை.
“ஒரு தேர்வு வைத்து பார்ப்போம். அவர் அதில் வெற்றி பெற்றால் நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்,“ எனக் கூறினார்.
அடுத்த நாள் அவர் பிச்சை எடுத்து வரும் போது, மாணிக்க கற்களை பிச்சை பாத்திரத்தில் இடுமாறு அரண்மனை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பணியாளர்களும் அவ்வாறே செய்தனர்.
பிறகு அமைச்சர் அரசரிடம், ''நாம் பிச்சை போட்ட மாணிக்க கற்களை, அந்த மகான் எடுத்து வந்து உங்களிடமே ஒப்படைப்பார்,'' என அமைச்சர் கூறினார். அரசரோ ''அப்படியெல்லாம் அவர் திருப்பித் தர வாய்ப்பே இல்லை,'' என்று எதிர்வாதம் செய்தார்.
மகானும் வரவே இல்லை.
மறுநாளும் அரசர், மகானின் பிச்சைப் பாத்திரத்தில் வைரங்களைப் போடச் சொன்னார். இம்முறையும் துறவி வராது போகவே, அரசர் வெற்றிப் புன்னகை செய்தார். மூன்றாம் நாள் முத்துக்களை பிச்சை போட்டனர். மகான் அன்றும் வரவில்லை.
உடனே அரசர் தன் காவலாளியை அனுப்பி, மகானை அரண்மனைக்கு வரவழைத்தார்.
''ஐயா! தினமும் பிட்சையில் கிடைக்கும் தானியங்கள் தங்களுக்கு போதுமானதாக இருக்கிறதா?' என கேட்டார்.
மகான் அவரிடம், “அரசே, என்ன கிடைத்ததோ அதை என் மனைவியிடம் கொடுத்து விடுவேன். அவள் சமைத்து துறவிகளுக்கு உணவிட்டபின் மீந்ததை நாங்கள் உண்போம். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், இன்று இறைவன் திரு உள்ளம் இதுவே என பேசாமல் இருந்து விடுவோம்” என்றார்.
அரசர் தொடர்ந்து,” தானியம் மட்டும் தான் கிடைக்கிறதா, வேறு ஏதேனும் உயர்ந்த பொருட்கள் கிடைக்குமா?” என கேட்க மகான் பேசாமல் நின்றார்.
''உமது பிச்சை பாத்திரத்தில் மாணிக்கம், வைரம், முத்து என எல்லாம் போட்டார்களாமே! அவற்றை என்ன செய்தீர்கள்…?” எனக் கேட்டார்.
“நான் முன் சொன்னது போல கிடைத்ததை என் மனைவியிடம் கொடுத்து விடுவேன், என்ன விழுந்தது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மாட்டேன்.
வேண்டுமானால், என் மனைவியிடம் கேட்டு பார்க்கிறேன்,'' என்றார் மகான்.
அரசர், “நானும் உடன் வருகிறேன்” என மகானுடன் சென்றார்.
அவர்கள் கூறியதைக் கேட்ட அந்தப்பெண், “நீங்கள் கொண்டுவந்த தானியத்தில் சில சமயம் கற்கள் இருப்பதுண்டு. அவை வைரங்களா, மாணிக்கங்களா
என்றெல்லாம் எனக்கு தெரியாது. அரிசிகளையும் போது, கற்களைக் குப்பையில் போட்டு விட்டு சமைப்பேன்,'' என்றாள் அமைதியாக.
“அப்படியென்றால் குப்பையில் பார்க்கலாமே!” என அரசர் குப்பைத் தொட்டியை கிளறும்படி பணியாளர்களுக்கு உத்தரவிட, வைரமும், மாணிக்கமும் மின்னிக் கொண்டிருந்தது.
“அரசே! என் மனைவிக்கு அரிசியில் இருக்கும் கல்லும், வைரங்களும் ஒன்றுதான். இவையெல்லாம் உங்கள் செல்வங்கள்.. எங்கள் செல்வமெல்லாம் இறைவனே!” எனக் கூற அரசர் தலை கவிழ்ந்தார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.