சற்றுமுன்

ஒரு கருவேலமரத்தின் மரண வாக்குமூலம்


என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல், எனது தரப்பில் யாரும் வாதிடாமல், எனது எதிரிகள், லை சில ஆர்வலர்கள் கொடுத்த குற்றங்களைப் பட்டியலிட்டு, அறிவியல் ஆதாரத்தைக் கூட கேட்காமல், நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். அதுவும் சாதாரணத் தண்டனையல்ல, மரண தண்டனை. எனது சந்ததிகளே இல்லாமல் போகும்படி எனது பரம்பரையை முற்றாக அழிக்கும் தண்டனை. இது வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெறும் நிகழ்ச்சி என்று கூடக் கூறலாம். இதுவரை மனிதர்களை மட்டும் தண்டித்த நீதிமன்றம் முதல்முறையாக ஒரு மரத்திற்கு மரண தண்டனை விதித்துள்ளது. என்னைப் பற்றியும், எனது பயன்பாடு குறித்தும், எனக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றியும் வருங்காலத்தில் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் எனது வாக்குமூலத்தை இங்கு கொடுத்துள்ளேன்.
 எனது பெயர் சீமைக்கருவேல் (வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட முள்செடி), ஆங்கிலத்தில் புரோசோபிஸ் ஜுலிப்ளோரா என்று அழைப்பார்கள். எனது சொந்த நாடு தென்னமெரிக்காவில் உள்ள பிரேஸில் என்றாலும், மனிதர்கள் உலகமயமாக்கல் கொள்கையை கொண்டுவருவதற்கு முன்பே நான் உலகமுழுவதும் எனது இருப்பை உணர்த்தி உள்ளேன். இந்தியாவில் 1911ம் ஆண்டில் இருந்து வளர்ந்து வருகின்றேன். இங்கு நானாக வரவில்லை. மனிதர்களின் எரிபொருள் தேவைக்கும், உயிர்வேலிக்காகவும் அவர்களே விரும்பிக் கொண்டு வரப்பட்டேன். தொடக்க காலங்களில் என்னைச் சீராட்டிப் பாராட்டி பரவலாக வளர்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை அறிந்து நானும் என்னால் முடிந்த அளவு வேகமாகவும் விரிவாகவும் வளர்ந்தேன். காடு மேடுகளில், தண்ணீரே இல்லாத இடங்களில், கற்களும் பாறைகளும் உள்ள நிலங்களில் என எங்கும் வளர்ந்தேன். கொஞ்ச காலந்தான் என் விதைகளைப் போட்டனர், பின்னர் நானாகவே வளர்ந்தேன். எனது காய்களை ஆடு, மாடுகள் விரும்பிச் சாப்பிட்டன. ஜீரணிக்கப்படாத எனது விதைகள் அவற்றின் சாணத்துடன் வந்து திறத்துடன் வளர்ந்தன.
வறட்சியைத் தாங்கும் எனது குணத்தை எல்லோரும் பாராட்டினர். அப்போதெல்லாம் இந்த இண்டேன் வாயும் இல்லை, மின் அடுப்புகளும் இல்லை. எல்லோரும் என்னை எரிபொருளாகப் பயன்படுத்தினர். குறிப்பாக, கிராமங்களில் நான் மட்டுமே எரிபொருளாக இருந்தேன். மதிய உணவு மையங்களில் கூட நான் தான் விறகாக எரிந்தேன். மக்கள் காடுகளுக்குச் சென்று விறகு எடுப்பதை முற்றாக ஒழித்தேன். என்னால் வனங்கள் காப்பாற்றப்பட்டன எனப் பலர் எழுதினார்கள். அவைகள் இன்றும் அறிக்கைகளில் பாதுகாப்பாக உள்ளன. இந்தக்கால மனிதர்கள் தான் படிப்பதையே மறந்துவிட்டார்களே! கடுமையான வறட்சிகள் வந்தும் எனது வம்சத்தை ஏதும் செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் வளர்ந்தேன். எனது பயன்களும் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே சென்றன. மரங்களாய், புதர்களாய், செடிகளாய் எனப் பல வடிவங்களிலும் நான் உற்பத்தியைப் பெருக்கினேன். என்னை உயிர் வேலியாகவும், அதில் அதிகம் வளரும் போது விறகாகவும் பயன்படுத்தினார். எனது அபரிதமான வளர்ச்சியைக் கண்ட சிலர் எரிகரியாக மாற்றினர். தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வேளாண்மை செய்யமுடியாத, மற்ற எந்தப்பயிர்களும் வளராத நிலங்களில் நான் வளர்ந்தேன். இதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆம், என்னை எரிகரியாக மாற்றி தமிழகம் அல்லாது மற்ற மாநிலங்களுக்கும் அளித்தனர்.
மனிதர்கள் எப்போதும் தங்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க பிறரை பலி கொடுப்பதுண்டு. ஆனால் இங்கு அவர்களின் செயல்களுக்கு நான் பலியாக்கப்பட்டுள்ளேன். மனிதர்கள் இயற்கையின் மீது நடத்திவரும் அத்தனை அழிவுகளையும் சாதாரண மரத்தின் மீது குற்றம் சாட்டி, குறிப்பாக இளைஞர்களை திசைதிருப்பி விட்டுள்ளனர்.
குறைந்த நீரில் முப்போகம் விளைவித்த சிறு தானியங்களை விட்டு, பணப்பயிர்மேல் பற்று கொண்டு வாழையும் கரும்புமாய் பயிரிட்டு, ஆயிரம் அடிவரை ஆழ்துளைக் கிணறுகளை வெட்டி நிலத்தடி நீரை வீணடித்தார்கள். அந்தப் பலியை நாலடி வேர் கொண்ட என் மீது போட்டதை அமைதியாக ஏற்க வேண்டியதாகிவிட்டது. வேரோடு என்னைப் பிடுங்கும் இவர்களுக்குத் தெரியாதா எனது வேரின் நீளம் 5 அடிக்கு மேல் இல்லை என்பது? தெரிந்தும், 70 அடி, 80அடி என எங்கோ எவனோ கற்பனையாக எழுதி வைத்ததைக் காட்டி என்னைத் தண்டித்துவிட்டனர். எல்லா தாவரங்களைப் போலத்தான் நானும் சுவாசிக்கின்றேன். எந்த அளவுக்கு நீரை எடுக்கின்றேனோ அதே அளவுக்கு ஹைடிரஜனை சேர்ப்பேன் என்பதை இவர்கள் வசதியாக மறந்து, இல்லை மறைத்துவிட்டனர். இன்று நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கூடாது எனப் போராடும் இவர்களுக்கு சாதகமாகத்தானே நான் எந்தவித மாசும் இன்றி ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்து கொடுக்கின்றேன். இதுகூடவா இவர்களுக்குத் தெரியாது? நான் காற்றில் உள்ள கார்பனை எடுத்துக்கொண்டு உயிர்வளி என்ற ஆக்ஸிசனை வெளியிடுவதும், நீரில் உள்ள ஹைட்ரஜனையும், ஆக்ஸிசனையும் எடுத்து, அதை கார்பனோடு சேர்த்து ஹைட்ரோகார்பனை உருவாக்குகின்றேன் என்பது இவர்களுக்குத் தெரியாதா?
இவர்கள் பயன்படுத்தும் எல்லா பெட்ரோலியப் பொருட்களுக்கும் அடிப்படை இந்த ஹைட்ரோகார்பன்தான். நிலத்தின் அடியில் பல லட்சம் ஆண்டுகள் புதைக்கப்பட்டதால் அவை அடர்த்தியாக உள்ளன. நான் அடர்த்தி இன்றி உள்ளதால் எனது வெப்பத்திறன் அதைவிடக் குறைவாக உள்ளது. ஆனால் நான் அவர்களைப்போல கரியமிலவாயுவை வெளியிட்டு வெளியை மாசுபடுத்துவதில்லை. நான் வெளியிடும் கரியமிலவாயுவை எனது தொடர் வளர்ச்சிக்கு நானே எடுத்துக்கொண்டு, வாயு அளவைச் சமன் செய்து விடுகின்றேன்.
 எனக்கு தெரிந்து இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி காட்டன் சைஸிங் ஆலைகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களின் பாய்லர்கள், கரியில் எரியும் தேநீர் அடுப்புகள், இஸ்திரி கடைகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரே எரிபொருள் நான் தான். என்து விலையும், ஒரு கிலோ மூன்று முதல் நாலரை ரூபாய் மட்டுமே என்பதோடு, மிகக்குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் நான் மட்டுமே என உறுதியாகச் சொல்வேன். எனது விலையில் மாற்று எரிபொருள் இல்லாததால் தமிழகத்தின் இன்னும் சில மாதங்களில், பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். அதில் கடுமையாக பாதிக்கப்படப் போவது துணி சைஸிங் தொழிலாகத்தான் இருக்கும். அரிசி ஆலைகளுக்காவது நெல் உமி உண்டு, மற்ற ஆலைகள் நிலக்கரி அல்லது எரிவாயுவைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கும்.
ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளிடம் மிகப்பெரிய அளவில் தேங்கியுள்ள கசடு எண்ணெய் எனப்படும் ஃபர்னேஸ் எண்ணெயை பெரும் மானியத்துடன் சந்தையில் இறக்கிவிடப்பட்டபோதிலும் சீண்டுவாரில்லாமல் கிடக்கிறது. இருக்கும் எரிபொருள்களிலேயே அதிகபட்ச (கிட்டத்தட்ட 4%) கந்தகத்தை மாசாக வெளியிடக்கூடியது இந்த எண்ணெய். இது 25 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் உறைந்துவிடும் என்பதால் குளிர்காலத்தில் தொட்டியிலிருந்து உறிஞ்சுவதற்கு மின்சார வெப்பமூட்டி வேண்டுமென்பதால்தான் இதைப் பயன்படுத்தாமல் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றன. டெல்லியில் 2000 சிசி-க்கும் அதிக சக்தியுடைய டீசல் மகிழ்வுந்துகளைத் தடை செய்த பின்னரும் காற்று மாசு குறையாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை இவர்களுக்கு. அங்கு பக்கத்து மாநிலங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதுதான் காரணம் என்று முட்டு கொடுக்கப்பட்டது. தலைநகரத்தில் எத்தனை ஆலைகளில் நாள்தோறும் எத்தனை ஆயிரம் லிட்டர் ஃபர்னேஸ் ஆயில் எரிக்கப்படுகிறது என்பதும், அதன் மானிய விழுக்காடு குறித்த தகவல்கள் எப்படி மறைக்கப்படுகிறது என்றும் எந்த நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை. இப்போது தெரிகிறதா, தலைநகர் முதல் பிற நகர்கள் வரை வாகனங்களைப் வழிமறித்து போக்குவரத்தைத் தடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டதும், ஒற்றைப்படை, இரட்டைப்படை உள்ள வாகனங்கள் என நாள் மாற்றிவிட்டும் மாசுப்புகை மறையவில்லை. இந்தப் புகை எவ்வாறு உற்பத்தியாகிறது? இதற்கு யார் காரணம்? நான் வெளியிடும் வெளிக்காற்றே மாசுக்கு காரணம் என்பது எப்படி மடைமாற்றமோ, அதுதான் அங்கும் நடந்துள்ளது.
 நீர் நிலைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் கட்டிடங்களைக் கட்டி ஆக்கிரமிப்புச் செய்துள்ளது யார் என்று கனம் நீதிபதிகளுக்குத் தெரியாது எனக் கூறமுடியுமா? நிலமெல்லாம் காங்ரீட் காடாக மாற்றிவிட்டு தாவர அழிவுக்கு நீதான் காரணம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? உழவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? நானா இல்லை, நிலத்தை நஞ்சாக்கிய வேதியல் உரங்கள், பூச்சிக்கொல்லி, பூஞ்சான்கொல்லிகளா? கடன்தொல்லை தாங்காமல் கால்நடைகளை விற்றார்கள், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனது இலைகளை உட்கொண்ட கால்நடைகள் மலடானது என, நான் வந்து ஒரு நூற்றாண்டு கடந்த பின் கதை கட்டப்படுகிறது, அதற்கு நீதிமன்றம் துணைபோகுது. இன்று கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு இயந்திரங்கள் காரணமா? இல்லை நானா? இயந்திரங்கள் வந்து அவற்றை ஒழித்ததா, இல்லை நான் ஒழித்தேனா? அனைத்தின் அழிவுக்கும் எப்படி உங்களால் என்னைப் பலியாக முடிந்தது? நிலத்தை நஞ்சாக்கிய பசுமைப்புரட்சியின் பாதகச் செயல்களுக்கும், இடையிடையே வந்துபோன பஞ்சங்களுக்கும் கூட நீ தான் காரணம் என்கிறீர்கள், நல்லவேளை என்டோசெல்பான் போன்ற விசமருந்துகளை நீ தான் உற்பத்தி செய்தாய் என்று குற்றம் சாட்டாமல் விட்டீர்களே அதுவே உங்களின் பெரிய மனசைக் காட்டுகிறது.
சாண வறட்டிகளை எரித்து வந்தபோது, அதற்குப் பதிலாய் எரிந்து எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய என்னையே அழித்துக் கொண்டதை வசதியாக மறந்து விட்டீர்கள். அதனால் இயற்கை வேளாண்மை எவ்வளவு அதிகரித்தது என யாராவது யோசித்தீர்களா? என்னால் பல காடுகள் காப்பற்றப்பட்டதெல்லாம் இப்போது பழங்கதை ஆகிவிட்டது. 
எனது ஆணிவேரும், சல்லிவேரும் பரவி மண்ணையும், மணல் குவியலையும் பாதுகாப்பதை யாரும் நினைவில் வைப்பதில்லை. ஆனால் மணல் கொள்ளையர்களுக்கு மட்டும் தெரியும், நான் மணல் மேடுகளை எவ்வளவு பாதுகாக்க முயற்சிக்கிறேன் என்பது. மணல் அள்ளத் தடையாக இருக்கிறேன் என்கின்றார்கள். சிலர் உணவுமுறையாலும், இன்றைய உற்பத்திமுறையாலும் மலடான மனிதர்களும் எங்களைக் கைகாட்டுகின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு என் சார்பில் யாருமில்லை என்பதினால்தனே இந்தத் தண்டனை. எனக்குத் தெரிந்து நான் செய்தது ஒரே குற்றம், மெரினாவில் போராடிய இளைஞர்களில் பலர் இன்று என்னை அழிக்கும் பணியை அர்ப்பணிப்புடன் செய்ய வைத்துள்ளேன்.
சென்ற வாரம் என்னை வெட்டும் பணியை பார்வையிட வந்த சில இளைஞர்களின் விவாதத்தைக் கேட்க நேர்ந்தது. அனைவரும் தன்னார்வத் தொண்டர்கள் என்றும், இப்போது என்னை அழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும், அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்தது. அந்த இளைஞர்கள் இந்த சமூகத்தின்பால் எவ்வளவு பற்று கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் என் மீது கொண்ட கோபத்தின் மூலம் காட்ட முயற்சித்தார்கள். என்னை முற்றாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்றனர். அவர்களிடம் உழவர்கள் சில சந்தேகங்களை எழுப்பினார்கள். கருவேலமரத்தை வேருடன் பறிக்கின்றீர்களே... அதன் வேரின் நீளம் எவ்வளவு உள்ளது என்பதை நேரில் பார்க்கின்றீர்கள், ஐந்து அடிகளுக்குமேல் இல்லை. ஆனால் இதை நம்பாது யாரோ எழுதி வைத்ததைத்தான் நம்புகிறீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் நீதிமன்றத்தை சாட்சிக்கு அழைத்தனர். மேலும் அவர்கள் கேட்டார்கள், எங்கெல்லாம் இந்தச் செடிகள் அதிகம் உள்ளன என்று. அதற்கு அவர்கள் பயன்படுத்தப்படாத நிலங்கள், பராமரிக்கப்படாத நீர் நிலைகள், நீர் வழிகள், பாதைகளின் இரண்டு பக்கங்கள் என்றனர். அவற்றை வெட்டி என்ன செய்கின்றீர்கள் என்றார்கள். விறகுக்குப் பயன்படும் அளவு உள்ளவற்றை எரிகரி செய்பவர்கள் எடுத்துக் கொள்கின்றனர், மற்ற சிறு சிறு கிளைகளை எரித்து விடுகின்றோம் என்றனர். அதில் ஒரு இளைஞன் வேர்களை முற்றாக எரிக்காவிட்டால் அது மீண்டும் துளிர் விட்டு வளர்ந்து விடும் எனக்கூறினார். எரிப்பதன் மூலம் வெளிவரும் கரிமிலவாயு பற்றிக் கேட்டபோதும், அதனால் வெப்பம் வெளிப்படுவது குறித்து கேட்டபோதும், பதில் எதுவும் கூறவில்லை. அதற்கு அந்த விவசாயி சொன்ன பதில் "எங்களின் வாழ்வாதரமே இந்த மரங்கள்தான். இவற்றை வெட்டிக் கரியாக்கி விற்றே பல குடும்பங்கள் பிழைத்து வருகின்றோம். இனி என்ன தொழில் செய்வது என யோசிக்க வேண்டும்" மேலும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான எரிபொருளாகவும், எரிகரியாகப் பயன்படுவதன் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் சில வறண்ட மாவட்டங்களில் கணிசமான மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறேன் என்பதற்கு இந்த உரையாடல் போதும்.
இன்று தமிழ் நாடு முழுக்க எங்களை அகற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை வேதவாக்காகக் கொண்டு பல்வேறு தன்னார்வக் குழுக்கள் எங்களை முற்றாக அழிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எங்களுக்கு எதிரான பரப்புரைகள் களை கட்டுகின்றன. சாதாரண பாமர மக்களும் கூட எங்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். அந்த அளவுக்கு விழிப்புணவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வியக்கும் அளவுக்கு அனைத்து தரப்பு மக்களாலும் வெறுக்கப்படும் அளவுக்கு என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நியாயமானவையா? அவைகள் தான் என்ன? அவற்றுக்கு அறிவியல் அடிப்படைகள் உள்ளனவா? என யாரும் கேள்வி கேட்கவில்லை. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தங்களின் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் அடிக்கும் கொட்டத்தையே தட்டிக் கேட்காதவர்கள் எனக்காக எப்படிக் கேட்பார்கள்?
என் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு, நான் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறேன் என்பதுதான். மரம் என்றால் அதன் வேர்கள் நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சத்தான் செய்யும், அதுதான் அதன் இயல்பு. ஏன் மற்ற மரங்களெல்லாம் நிலத்திலுள்ள நீரை உறிஞ்சுவதில்லையா? ஆலமரம், அரசமரம் போன்ற மரங்களின் வேர்கள் என் வேர்களைவிட ஆழமாக ஊடுருவும் தன்மை கொண்டவை. அந்த மரங்கள் உள்ள இடங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதற்கான சான்று என்ன? என்னால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்பது பற்றி எத்தனை இடங்களில் முறையான ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது? எத்தனை ஆராய்ச்சியாளர்கள் விசாரிக்கப்பட்டனர்? அதற்கான ஆய்வுத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துபோனதற்கு என்ன காரணம் என்பது நாடறிந்த உண்மை. நான் கூறித் தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை தெரியுமா ? அவற்றின் ஆழம் எவ்வளவு என அறிந்தார்களா? அதையெல்லாம் செய்தால் உண்மைக் குற்றவாளிகள் தெரிந்து விடுவார்களே!
இந்தியாவிலுள்ள சுமார் 8.11 மில்லியன் ஹெக்டர் கடலோர உப்புத்தன்மையுள்ள நிலங்கள் எந்தத் தாவரங்களையும் வளரவிடாது. அந்த நிலங்களை அப்படியே விட்டால் காலப்போக்கில் மண்ணரிப்பு ஏற்பட்டு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உப்பு நீர் விளைநிலங்களில் புகும் அபாயம் ஏற்படும். அப்படி கடினமான உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளிலும் கூட வளரக்கூடிய அரிதினும் அரிதான மரங்களில் நானும் ஒருவன். கடலோரப் பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமலும், உப்பு நீர் ஊருக்குள் புகாமலும் தடுத்து உயிர் வேலியாக எனது பணியைத் திறம்பட செய்துகொண்டுதான் இருக்கிறேன். சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்த புல் பூண்டு கூட முளைக்க முடியாத மலட்டு மண்ணிலும் வளர்ந்து என் இலைகளை உதிர்த்து உதிர்த்து மண்ணின் மலட்டுத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கி, இப்போதுதான் ஆங்காங்கே புற்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. இனி மலட்டுத் தன்மை நீங்கிய மண்ணில் குறிப்பிட்ட வேறு சில செடிகளை நட்டால் நிச்சயம் அது வளரும். ஆனால் அப்படி மற்ற செடிகளை நடுவதற்கு என்னை அகற்றித்தான் ஆகவேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தால் நிச்சயம் அதை நான் வரவேற்று இருப்பேன். அதை விடுத்து தமிழ் நாடு முழுக்க உள்ள சீமைக் கருவேல மரங்களை மானவாரியாக அகற்ற வேண்டும் என்பதன் பின்னணி என்ன? அறியாமையா? அல்லது சர்வதேச சதியா? அதானிகளின் சூரிய மின்னாற்றல் அமைக்கத் தேவையான சுத்தமான நிலத்திற்கா? இல்லை, எல்லோரும் இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?
‘எல்லா மரங்களும் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால் சீமைக் கருவேல மரம் மட்டும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும்’ என்ற எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாத கருத்தும் மக்களிடம் பரப்பப்படுகிறது. அறிவியலுக்கு எதிரான இந்தக் கருத்தை பரவவிட்டது யார்? இந்த கருத்து படித்த பட்டதாரி இளைஞர்களால்கூட அப்படியே நம்பப்படுகிறது என்பதுதான் இன்னும் வேடிக்கையானதாகவும், கேளிக்கையானதாகவும் உள்ளது. நமது கல்வித்தரத்தை குறைபட்டுக்கொள்வதா இல்லை, சொல்வதை எந்தப் பரிசீலனையும் செய்யாத இளைஞர்களை நொந்து கொள்வதா?
மற்ற மரங்களில் ஏதாவது மருத்துவ குணம் உள்ளது. ஆனால் இந்த மரத்தில் வெறும் முள் மட்டும்தான் உள்ளது எனத் திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரைதான் சர்வதேச நாடுகளின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. Flavan-3-ols என்ற வேதிப்பொருள் எனது தண்டுகளில் அதிகமாக உள்ளது. சர்வதேச பானமாகிப்போன தேயிலை மற்றும் சாக்லேட் செய்யப் பயன்படும் கோகோ போன்ற தாவரங்களின் தனித்துவமே இந்த Flavan-3-ols என்ற வேதிப்பொருள்தான். 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அமைப்பினால் இந்த Flavan-3-ols என்ற வேதிப்பொருளின் மருத்துவத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தும். இந்த ஆராய்ச்சியை துரிதப்படுத்தினால் இதய அடைப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத எளிமையான மருத்துவமுறையை இந்த உலகுக்கு என்னால் அறிமுகப்படுத்தப்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த உலகின் பெட்ரோல், டீசல் போன்ற புதுப்பிக்க முடியாத ஹைட்ரோகார்பன் போன்ற எரிபொருள்களின் இருப்பு இந்த நூற்றாண்டுக்கே போதுமானதாக இல்லை. பெட்ரோலியம் இன்னும் 40 வருடங்களுக்கும், இயற்கை எரிவாயு 65ஆண்டுகளுக்கும், நிலக்கரி இன்னும் 200 ஆண்டுகளுக்கும் தான் இருப்பு உள்ளது என ஆய்வுகளில் கணக்கிட்டுள்ளனர். இதுவும் இப்போதுள்ள பயன்பாட்டின் அடிப்படையில். அன்றாடம் நமது ஆற்றல் தேவை பல மடங்கு அதிகரித்து வருவது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். வருங்காலம் சூரிய ஆற்றல், காற்று ஆற்றல் மற்றும் தாவர எரிபொருள் போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் காலம். நிச்சயம் பெட்ரோலுக்கான மாற்றுப்பொருள் அடுத்த நூற்றாண்டை ஆளும். வளர்ந்த நாடுகளில் 'Energy plantation' என ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய 'ஆற்றல் காடுகள்' என்ற கருத்துரு வலுப்பெற்று, அதில் ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மூங்கில், சவுக்கு, மழைவேம்பு என பல மரங்களைத் திட்டமிட்டு வளர்க்கும் முயற்சியும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சாதாரணமாக எந்தவித முயற்சியும் இல்லாமல் வளரக்கூடிய என்னை ஆற்றல் காடுகளில் மிக முக்கியமான மரம் நான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எனக்கு இணையாக, எல்லா நிலங்களிலும், அனைத்துக்காலங்களிலும், நீரே இல்லாத இடங்களிலும் வளரக்கூடிய மரம் ஒன்றைக் கூறினால், நீங்கள் அழிக்கவேண்டாம், நானே தற்கொலை செய்து கொள்கின்றேன்.
நீ என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், உன்னில் விசம் உள்ளது, முள் உள்ளது, மற்ற செடிகளை வளர விடுவதில்லை, அதனால் வெட்டுவோம் எனச் செல்பவர்களே நில்லுங்கள். வெட்டிவிட்டு வேறு என்ன மரத்தை அந்த இடத்தில் நடப் போகிறீர்கள்? அப்படியே நீங்கள் நடும் மரம் அங்கு நன்றாக வளருமா? அவற்றால் இந்த வறட்சியில் வளர முடியுமா? உப்பு நீரில் வருமா? அவை தண்ணீரே எடுக்காதா? இவற்றையெல்லாம் பரிசீலித்தீர்களா?
கைவிடப்பட்ட நிலங்களிலும், அரசுக்குச் சொந்தமான யாருக்கும் பயனில்லாத நிலங்களிலும், எந்த செடியும் வளரத் தகுதியற்ற உவர் நிலங்களிலும்தானே நான் வளர்கின்றேன். விவசாய நிலங்களில் இருந்தால் அகற்றுங்கள். உங்களுக்குத் தேவையான வேறு நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் இருந்தால் தாராளமாக அகற்றுங்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக வேரறுக்க வேண்டும் என்பதுதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் என் வளர்ச்சியைக் கூட கட்டுப்படுத்துங்கள். வேண்டாத இடங்களில் வளர்ந்தால் வேருடன் வெட்டுங்கள், நான் எதிர்க்கமாட்டேன். நான் வளர்ந்த இடம் சாகுபடிக்கு நிச்சயம் பயன்படும்.
 கிராம முன்னேற்றம் பற்றிப் பேசும், எத்தனை பேருக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை, கிராமங்களில் நிலம் இல்லாதவர்களுக்கு சொத்தாக இருப்பது இயற்கை வளங்கள்தான். சென்ற காலங்களில் காடுகளும், ஆறுகளும், கரடுகளும் தான் சாதாரண மக்களின் சொத்தாக இருந்தன. காடுகளில் காய்ந்த மரங்களை வெட்டி விறகாகவும், மரக்கருவிகளாகவும் விற்று வாழ்ந்தனர். ஆறுகளில் மீன் பிடித்து விற்று வாழ்ந்தனர். காடுகளிலும், புல் தரைகளிலும் ஆடு மாடுகள் மேய்த்து வாழ்ந்தனர். இப்போது இந்த இயற்கை வளங்கள் எதுவும் இல்லை. இயற்கை வளமாக இருப்பவன் நான் மட்டும் தான். என்னை வெட்டி மரமாகவும், விறகாகவும் விற்று வாழ்பவர்கள் பலர் இன்று கிராமங்களில் வாழ்கின்றனர். என்னை எரிகரியாக மாற்றி விற்று வாழ்பவர்கள் பலர். எனது காய்களை நம்பியே ஆடு வளர்ப்பவர்கள் பலர். நிலமை இப்படி இருக்கும் போது நான் எப்படி மக்கள் விரோதியாவேன்?
இன்னும் நீங்கள் யார் யாரையெல்லாம் தண்டிக்க வேண்டி இருக்கும் என்பதை யோசித்தீர்களா?
வேண்டியபோது பெய்யாமல் வேண்டாத காலத்தில் கொட்டும் மழையை, வெள்ளப்பெருக்கை, கட்டுப்பாடற்ற காற்றை, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை, என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தண்டிக்கப் போகிறீர்களா? இல்லை, இவற்றையெல்லாம் என்னைப் போல் அழிக்க முடியாது என்பதால் விட்டுவிடப் போகின்றீர்களா?
இயற்கை வளங்களைச் சுரண்டி வாழும் கூட்டத்திற்கு தண்டனை கொடுப்பதில் இருந்து தப்பி, எங்களைப் பலிகொடுப்பது என முடிவு செய்துவிட்டால் நான் சொல்வதற்கு எதுவுமில்லை.
ஜல்லிக்கட்டு நடத்தி நாட்டுப் பசுக்களைக் காப்பாற்றிய தன்னார்வலர்கள், தமிழரின் மரபுசார் விளையாட்டில் கலந்துகொண்டு ஆங்காங்கே இறந்து கிடக்கும் இளைஞர்களின் பிணத்தை எந்தச் சலனமும் இல்லாமல் தாண்டிச்சென்று, இன்று எங்களை வெட்டி வேருடன் அழிப்பதில் ஆனந்தப்பட்டுக் கொண்டுள்ளனர்.
அந்தந்தத் துறைசார் வல்லுனர்கள், அதிகாரிகள் என்ற இனம் அருகி தன்னார்வலர்களே மருத்துவர்களாக, நீரியல் நிபுணர்களாக, மண்வள வல்லுநர்களாகி விட்டனர். வல்லுநர்களும் பிழைப்பு நடந்தால் போதும், எதிர்த்தாக்குதல் கொடுத்து, பொறுப்பு ஏற்கத் திராணியற்றுப் போய்விட்டார்கள். சில அரசியல்வாதிகளின் பிழைப்பே எங்களை அழிப்பதில் உள்ளது என்கிறார்கள்.
இந்த விலை குறைவான விறகுக்கு மாற்று இல்லாததால் தமிழகத்தின் பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். அதில் கடுமையாக பாதிக்கப்படப்போவது துணி சைஸிங் தொழிலாகத்தான் இருக்கும். அரிசி ஆலைகளுக்காவது நெல் உமி உண்டு. மின்சாரத்தை நெருப்புக்கு மாற்றாக பயன்படுத்த த. நா. மி. வா இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு உபரி மின்சாரம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. ரூபாய் நோட்டு பிரச்சனையில் இருந்து தட்டித் தடுமாறி எழும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என்பது எனக்குத் தெரிகிறது ஆனால் தெரியவேண்டியவர்களுக்கு யார் சொல்வது?
ஓர் உயிர்ச்சூழலில் ஒரு மரத்தினை, அதுவும் அதிக அளவில் பரவியுள்ள மரத்தை, முற்றிலுமாக அகற்றும்போது அடுத்த வலுவான தாவர இனம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பது இயல்பு. ஆனாலும், கோடை ஆரம்பிக்கும் தருவாயில் அவற்றை அப்புறப்படுத்துகையில் கோடை முடிந்து அடுத்த மழை வரும்வரை அந்த இடம் கட்டாந்தரையாகவே கிடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கன மழை வரும்போது மாற்று மரங்களோ, செடிகொடிகளோ இல்லாத நிலையில் ஏற்படப்போகும் கடுமையான மண் அரிப்பு, அதனால் மேல் மண்ணில் ஏற்படும் சத்துக்கள் இழப்பு, வெட்டி வீசப்பட்ட நுனிக்கிளைகள் நீர்வழிப்பாதைகளில் சென்று வாய்க்கால்களை, மதகுகளை அடைத்து அதனால் உண்டாகப்போகும் கரை உடைப்புகள், அதன் மேற்படி சேதம் எல்லாம் மனிதத் திட்டமிடலில் உள்ள தவறால் நிகழக்கூடியவை. இதையெல்லாம் நான் ஏன் கூறவேண்டும்? மரண தண்டனை கொடுத்த பின்னும் என் உதவிக்குணம் மாற மறுக்கிறது.
இன்னும் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட நினைக்குறேன். ஒரு அடி ஆற்றுமணல் உருவாக குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும். வெட்ட வெட்ட வளர ஆற்று மணல் ஒன்றும் சீமைக்கருவேலமரம் இல்லை. காவிரி, அமராவதி, நொய்யல் ஆறுகளில் இரவு பகல் பாராமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மணல் அள்ளப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதை ஏன் நீதிமன்றம் தடைபோட்டு நிறுத்தவில்லை? ஏன் அந்த மாநிலங்களில் ஆறு இல்லையா? மணல் இல்லையா? நிறையவே இருக்கிறது. ஆனால் அந்த மாநில அரசுகள் ஆற்று மணலை அள்ளத் தடை விதித்துள்ளன. மணலை அள்ளினால் மாநிலமும், மக்களும், விவசாயமும் நாசமாய் போகும் என்ற தெளிவான எண்ணம் அம்மாநில அரசுக்கு உள்ளது. மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஒன்றை இங்கு செயல்படுத்த ஏன் நீதிமன்றம் தாங்குகிறது?
உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும் மற்றும் நண்பர்கள், உறவினர்கள்தான் இந்த மணல் அள்ளும் டெண்டர்களை எடுப்பவர்கள். அதுவும் அடிமாட்டு விலைக்குதான். அரசியல்வாதிகளுக்குச் சேர வேண்டிய தொகை மாத மாதம் பல கோடிகளில் வீட்டிற்கே வந்து சேர்ந்து விடும். அவர்களும் மணல் அள்ளுவதற்கு எந்த ஒரு தடையும் தொந்தரவும் வராமல் பார்த்துக் கொள்வார்கள். உள்ளூர் போலீசும், ரவுடிகளும் இவர்களுக்கு கைக்கூலிதான். திடீரென யாராவது எதிர்த்தால் சில ஆயிரம் அதிகபட்சம் ஒரு லட்சம் குடுத்து வாயை அடைத்து விடுவார்கள். கோவிலில் பிச்சைக்காரனுக்கு நாம் போடும் ஒரு ரூபாய்க்கு சமம் அந்த ஒரு லட்சம். பணத்திற்கு மயங்காமல் அதையும் மீறி எதிர்த்தால் உங்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் விரைவில் ஒட்டப்படும். ஆனால் என்னைப் பயன்படுத்தும் ஏழைகளால் என்ன பயன் என்பதால் எனக்கு மரண தண்டனை.
இப்போது தெரிகிறதா நிலத்தடி நீர் யாரால் உறிஞ்சப்படுகிறது என்பது? ஆற்று மணலை விடாமல் அள்ளுவதால் குறைந்தபட்சம் சுற்றுப்பகுதிகள் 30-40 கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்தடிநீர் குறைந்து விடும். எந்தக் கடவுள் நினைத்தாலும் நிலத்தடி நீரை மீண்டும் உயர்த்த முடியாது. தண்ணீருக்காக ஒவ்வொரு தெருவிலும், ஊரிலும், மாவட்டத்திலும், சண்டை வரும்..... கர்நாடகா, கேரளாக்காரன் எப்படி அணை கட்டி தண்ணீர் தர மறுக்கிறானோ, அதேபோல தமிழ்நாட்டில் இன்னும் 20 வருடங்களுக்குள் ஒரு மாவட்டம் இன்னொரு மாவட்டத்துக்கு தண்ணீர் தராமல் சண்டைகள் வரும்.... கலவரங்கள் உருவாகும்... தண்ணீருக்காக உள்நாட்டு போர் வந்தால் கூட ஆச்சர்யமில்லை.
பஞ்சம், பட்டினி, விவசாயம் அழிவு, தற்கொலை, விலைவாசி உயர்வு என அழிவை மட்டுமே நோக்கிய பல விஷயங்கள் இந்த மணல் கொள்ளைக்குள் ஒளிந்திருக்கிறது. இதையெல்லாம் மறைக்க, நான் இப்போது பலியாக்கப்பட்டுள்ளேன்.
 தினம் பல லட்சம் லிட்டர் தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுக்கும் குளிர்பானம் தயாரிக்கும் அன்னிய நிறுவனம் குற்றம் ஏதும் செய்யவில்லை, உபரியைத்தான் எடுக்கிறார்கள் எனத் தீர்ப்பு வரும்போதே நீதியின் நிலையை அறிந்து கொண்டேன். நான் எதிர்காலத்தின் ஆற்றல் வளம் என உயிர் ஆற்றல் வல்லுனர்கள் சொல்லும் போதெல்லாம் சொக்கிப்போவேன். ஆனால் இன்று எனக்கே எதிர்காலம் இல்லை என்றாகிவிட்டது. என்னை வெப்ப எரிவாயு கலனில் இட்டு உற்பத்திவாயுவாக மாற்றலாம், அதை வெப்ப ஆற்றலாகவும், மின்னாற்றலாகவும் மாற்றிப் பயன்படுத்தலாம். காற்று இல்லா வெப்பமூட்டல் மூலம் என்னை எரிகரியாகவும், உயிரிக்கச்சா எண்ணையாகவும் மாற்றிப் பயன்படுத்தலாம். இவை சார்ந்த ஆய்வுகளை இன்னும் முடுக்கி விடலாம். என்னை முறையாகப் பயன்படுத்தினால், நானும் வாழ்வேன், மனித இனமும் வாழும்.
நான் வெளிநாட்டில் இருந்து வந்தேன் என்று தண்டித்தால், தண்டிக்கப்படுபவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். நீங்கள் பயன்படுத்தும் காய்கறிகளில் தொடங்கி உங்கள் கைபேசிவரை வெளிநாடுதான். இதற்கெல்லாம் தண்டனை என்ன?
இறுதியாக எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டு இந்த வாக்குமூலத்தை எழுதி உதவிய வல்லுனருக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.
இப்படிக்கு
தமிழகத்தின் சீமைக் கருவேல மரம்
சீமைக் கருவேல மரத்தின் வாக்குமூலத்தை கேட்டு, பதிவு செய்வதற்கு உதவியவர்
- முனைவர் ப.வெங்கடாசலம், முன்னாள் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்                       

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.